தமிழ்நாடு எண்ணற்ற வரலாறுகளும், கலாசாரமும், பாரம்பரியமும், குறைவில்லாமல் கொட்டிக்கிடக்கும் மாநிலம். அதில் முக்கியமான ஒன்று நாம் போராடி மீட்டெடுத்த ஜல்லிக்கட்டு. அதிலும், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு என்றால் வெகுபிரசித்தம்.
என்னதான் மாடுகள் வளர்ப்பு தற்போது குறைந்துவிட்டாலும்கூட, அந்த ஜல்லிக்கட்டு காளைகளை 'இவன் தான் என் தம்பி, என் அண்ணே' என்று உறவுமுறைகள் கொண்டாடுவோர் ஏராளம்.
தங்கம் போல் மின்னும் கூர்மையான கொம்புகள், எங்கே என்னை வந்து பிடி பார்க்கலாம் என திமிராய் அழைக்கும் திமில், பார்வைகளால் மிரளவைக்கும் கண்கள் என ஜல்லிக்கட்டு காளைகள் தமிழ் மண்ணிற்கு எப்போதுமே பிரமாண்டம் தான்.
கரோனா வைரஸ் பாதிப்பால் திருவிழாக்கள், பூஜைகள், விசேஷங்கள், ஜல்லிக்கட்டு போன்ற எதற்குமே அனுமதி இல்லாமல் ஊரடங்கிப் போனது இந்த வருடம். தமிழ்நாட்டிலேயே கின்னஸ் ரெக்கார்டில் இடம்பிடித்த ஜல்லிக்கட்டு பெருமை, புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உண்டு. புதுக்கோட்டையில் ஆண்டுதோறும் 130க்கும் மேற்பட்ட வாடிவாசல் திறக்கப்பட்டு, ஜல்லிக்கட்டுத் திருவிழாவாக கொண்டாப்படுகிறது.
அதேசமயம் புதுக்கோட்டை மாவட்டத்தில் காளை மாடுகள் வளர்ப்போர் அதிகம் என்றே சொல்லலாம். குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் கைக்குறிச்சி எனும் பகுதியில் ஜல்லிக்கட்டுக்கென்றே காளைகள் வளர்க்கப்படுவது ஒரு தனிச்சிறப்பு. இந்த ஆண்டு கரோனாவால் ஒரு ஜல்லிக்கட்டுகூட புதுக்கோட்டையில் நடக்க முடியாமல் போகும் நிலை உருவாகியுள்ளது.
இதுகுறித்து அப்பகுதி காளை வளர்ப்போர் கூறுகையில், ‘முன்பு ஜல்லிக்கட்டை தடை செய்யப்பட்டு, மீண்டும் அதனைப் போராடி மீட்டெடுத்தோம். தற்போது கரோனா வந்ததால், ஜல்லிக்கட்டு நடக்காமல் மாவட்டமே கலையிழந்து விட்டது. காளை மாடுகளுக்குத் தீவனத்திற்காக மட்டுமே மாதத்திற்கு 60 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை செலவு செய்கிறோம். இருந்தாலும் தங்களது வீட்டில் உள்ளவர்களைப் போலத்தான், நாங்கள் எங்கள் மாடுகளையும் பார்க்கிறோம்.
அதன் காரணமாக காளைகளுக்கு இருப்பிடம், வியர்வை சிந்தாமல் இருக்க ஃபேன் போன்றவற்றையெல்லாம் அமைத்து, மிகவும் உணர்வுப்பூர்வமாக வளர்த்து வருகிறோம். இங்குள்ள மாடுகள் தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று ஏராளமான பரிசுகளை வென்று வந்துள்ளது. எவ்வளவு படித்து, பெரிய வேலைக்குச் சென்றாலும் கூட இந்த மாடு வளர்ப்பை நாங்கள் ஒருபோதும்விட மாட்டோம்.
தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொருவருமே மாடு வளர்க்க வேண்டும். அப்போது தான் நாட்டின மாடுகளின் வளர்ச்சி அதிகரிக்கும். அரசாங்கம் சொன்ன அனைத்து விதிகளையும் இந்த ஊரடங்கில் பின்பற்றி ஜல்லிக்கட்டை நடத்தாமல் இருந்தோம். அதேபோல் வரும் வருடத்தில் நிறைய ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் மீண்டும் எப்போது ஜல்லிக்கட்டு நடக்கும் என்று ஏக்கத்துடன் காத்திருக்கிறோம். ஏனென்றால் காளைகள் தான் எங்களது உயிர்’ என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:ஐபிஎல் 2020: அட்டவணை வெளியீடு!