இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்டப் பொதுக்குழுக் கூட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் அப்துல் ரகுமான் தலைமை தாங்கினார். இதில், ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அப்துல் ரகுமான், "இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திமுக கூட்டணியில்தான் அங்கம் வகிக்கிறது. திமுக கூட்டணியில் வரும் சட்டப்பேரைவத் தேர்தலில் ஆட்சி அமைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானா, பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் இஸ்லாமிய அமைப்பான yc அமைப்பு போட்டியிட்டதைப் போல தமிழ்நாட்டிலும் வரும் சட்டமன்றத் தேர்தலில் yc அமைப்பு போட்டியிடக் கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சிறுபான்மையினர் வாக்கு பிரியும் என்று பாஜக நினைத்து பின்புறமாக இயக்குகிறது. ஆனால் தமிழ்நாட்டில் இது எடுபடாது. அவர்கள் நிற்பதால் சிறுபான்மையினர் வாக்கு சிதறாது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 15 தொகுதிகள் சாதகமாக உள்ளன என்று கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும் எவ்வளவு தொகுதிகளில் போட்டியிடுவது என்பது முக்கியமல்ல. பேச்சுவார்த்தையின்போது உரிய இடங்களை நாங்கள் கேட்டுப் பெறுவோம். ஆனால் பாஜக கூட்டணியை வீழ்த்துவதுதான் எங்களுடைய ஒரே குறிக்கோளாக இருக்கும்.
மேலும், நடிகர் ரஜினிகாந்த் , கமல்ஹாசன் அரசியல் கட்சி தொடங்குவதால் திமுக கூட்டணிக்கு எந்தப் பாதிப்பும் கிடையாது. அவர்கள் பின்னால் அவருடைய ரசிகர்கள்தான் செல்வார்களே தவிர வாக்காளர்கள் செல்ல மாட்டார்கள்" எனத் தெரிவித்தார்.