மக்களவை தேர்தலை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம், சிவகங்கை தொகுதியில் எச்.ராஜா பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அந்த பரப்புரைக்கு பிறகு ஈடிவி பாரத்திற்காக அவர் அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்து பேசினார்.
ஈடிவி பாரத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் அவர் பேசியதாவது, "ஆட்சிக்கு வந்த பிறகு முதலில் தண்ணீர் பிரச்னையை தீர்க்க வேண்டும் என முடிவு செய்துள்ளேன். தண்ணீர் அத்தியாவசிய தேவை, ஆனால் அந்த தண்ணீர் இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர். பஞ்சத்தை போக்கும் நோக்கில், காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்துவதே எனது முதல் நோக்கம்.
ப.சிதம்பரம் ஏழு முறை வெற்றி பெற்றிருந்தாலும் அவர் மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை என்பதுதான் உண்மை. மக்களுக்கு அவரது ஊழல் குடும்பத்தின் மீது முழு வெறுப்பு வந்துவிட்டது, ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக அவர் மீது மக்களின் வெறுப்புதான் எங்களுக்கு பலமே" என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர் "அறந்தாங்கியில் பெரியார் சிலை உடைக்கப்படதற்கு திமுகவும், திகவும் தான் காரணம். கிருஷ்ண பரமாத்மாவை வீரமணி இழிவாக பேசியுள்ளார். அதை நியாயப்படுத்தும் நோக்கத்தில் கார்த்திக் சிதம்பரம் ஈடுபட்டார். வீரமணியின் இந்த செயலை மறைத்து மக்களை திசை திருப்பும் எண்ணத்தில் திமுக இவ்வாறு செய்துள்ளது" என்று தெரிவித்தார்.