புதுக்கோட்டை மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற 1,430 மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் சுற்றுச்சூழல் துறை மெய்யநாதன் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர். முதல் பரிசாக 3 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 2,000 ரூபாயும், மூன்றாம் பரிசாக ஆயிரம் ரூபாயும் வழங்கினார்கள். மேலும் அமைச்சர்கள் பதக்கங்களும் வழங்கினர்.
மேலும் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, “நீதிபதிகளுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை அரசுக்கு வந்துள்ளது. நீதிபதிகளின் சம்பளத்தை உயர்த்துவது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசு ஒரு சீராய்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளது. அந்த சீராய்வு மனுவின் அடிப்படையில் என்ன தீர்ப்பு கிடைக்கிறதோ அதனை தமிழக அரசு நிறைவேற்றித் தான் ஆக வேண்டும்.
இருந்தாலும் நீதிபதிகளின் கோரிக்கை முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் காரணத்தினால் அதைப் பற்றி நாங்கள் தெளிவாக சொல்ல முடியவில்லை. ஆனால், நீதிபதிகள் தரப்பில் இருந்து அந்த வழக்கு முடிந்துவிட்டதாக கூறுகின்றனர். இந்த விவகாரத்தில் கருத்துகளை கேட்டு, அதன் பின்பு நீதிபதிகளின் சம்பளத்தை உயர்த்துவது குறித்து அரசு முடிவு எடுக்கும்.
இதையும் படிங்க: இன்ஸ்டாவில் இளம் பெண் போட்டோவை மார்பிங் செய்த இளைஞருக்கு நீதிமன்றம் ஜாமீன்!
செந்தில் பாலாஜி கடந்த 2014ஆம் ஆண்டு ஊழல் செய்ததாக சென்ற வாரம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அவரை கைது செய்தபோது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
செந்தில் பாலாஜி விவகாரத்தில் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றது குறித்து அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது குறித்து பதிலளித்த அமைச்சர், “ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என்கின்ற போது நீதிமன்றத்திற்கு சென்று அவரது ரத்த சம்மந்தமான உறவினர்கள், உடல் நிலையை சரி செய்ய இந்த மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என கேட்கின்றனர்.
அப்போது அதற்கான உத்தரவை தருகின்ற உரிமை நீதிமன்றத்திற்கு உண்டு. நாங்கள் இந்த உத்தரவை தரவில்லை. நீதிமன்றம் பார்த்து செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்பதால் தான் இந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. நாங்களாக எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை” என்றார்.
இதையும் படிங்க: அதிமுக ஆட்சியில் தூங்கிக்கொண்டிருந்த மருத்துவத்துறையை தட்டி எழுப்பியுள்ளோம்: அமைச்சர் மா.சுப்ரமணியன்