இது குறித்து மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி தெரிவித்ததாவது:
தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலுக்கிணங்க புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனா நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
அரசு அறிவித்த விதிமுறைகளின்படி மாவட்டம் முழுவதும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டுவருவதுடன், கிருமிநாசினி தெளித்தல், தூய்மைப் பணியினை மேற்கொள்ளுதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. தவிர்க்க முடியாத காரணங்களுக்காக வீட்டை விட்டு வெளியே வரும் பொதுமக்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து, கட்டாயம் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுவருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் தொடர் மருத்துவக் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இதன் விளைவாக கடந்த சில நாள்களுக்கு முன்பு அரிமளம் ஊராட்சி ஒன்றியம், மிரட்டுநிலை கிராமத்தில் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் கரோனா நோய் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
மேலும் மிரட்டுநிலை, அதனைச் சுற்றியுள்ள கிராமங்கள் பாதுகாப்பு வளையங்களுக்குள் கொண்டுவரப்பட்டு, எவரும் வெளியே செல்ல முடியாதபடி தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுவருகிறது. அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் அவர்களின் இருப்பிடங்களுக்கே நேரடியாகச் சென்று வழங்கப்பட்டுவருகின்றன.
இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் எவருக்கும் நோய்த் தொற்று கண்டறியப்படவில்லை. இந்நிலையில் அரிமளத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட நபருக்கு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள் உரிய சிகிச்சையினை தொடர்ந்து வழங்கிவந்தனர். அரசு மருத்துவர்களின் சிறப்பான சிகிச்சையின் பயனாக கரோனாவால் பாதிக்கப்பட்ட மிரட்டுநிலையைச் சேர்ந்தவர் பூரண நலம் பெற்றார்.
மேலும் அவருக்கு நடத்தப்பட்ட பலகட்ட மருத்துவப் பரிசோதனைகளில் பூரண குணமடைந்து தற்போது கரோனா நோய் இல்லை என முடிவு வரப்பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து முழுமையாக குணமடைந்த மிரட்டுநிலையைச் சேர்ந்த நபர் இன்றையதினம் (மே 6) நலமுடன் வீடு திரும்பினார். மேலும் அவர் தனக்குச் சிறப்பான முறையில் சிகிச்சை அளித்து குணப்படுத்திய மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்களுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.
முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பிய மிரட்டுநிலையைச் சேர்ந்தவர் அவரது வீட்டில் தொடர்ந்து 14 நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவார். மேலும் தினமும் மருத்துவர்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுவருவார். தமிழ்நாடு அரசும், சுகாதாரத்துறையும் மேற்கொண்ட சிறப்பான நடவடிக்கையின் பயனாக புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் நபர் விரைவாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் ஊரடங்கை கடைப்பிடித்து கரோனா நோய்த் தொற்றிலுருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கேட்டுக் கொண்டார்.