புதுக்கோட்டை: காவிரியில் தமிழகத்துக்கு வரவேண்டிய தண்ணீரை கர்நாடகா திறக்காததால் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிப்படைந்துள்ளது. இதனால் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை வழங்காமல் இருந்து வரும் கர்நாடக அரசை கண்டித்து தமிழக முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள், சமூக அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
மேலும் தமிழக அரசு சார்பில் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை, காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவுபடி கர்நாடகா அரசு உரிய முறையில் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த அறந்தாங்கி தாலுகா, எருக்கலகோட்டையைச் சேர்ந்த விவசாயி சோ.அறிஞர் என்பவர், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை உடனடியாக கர்நாடக அரசு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டார்.
இது குறித்து அவர் கூறுகையில், “தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு வழங்காததால் தற்பொழுது விவசாயிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் நீதிமன்றம் உத்தரவிட்டும் தற்பொழுது தண்ணீர் வழங்காமல் இருக்கும் கர்நாடக அரசுக்கு, தமிழகத்தில் இருந்து வழங்கப்படும் மின்சாரம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
மேலும், நீதிமன்ற உத்தரவை உதாசீனப்படுத்தும் கர்நாடக அரசைக் கண்டித்து பட்டினி கிடந்து முட்டிபோட்டு பிரார்த்தனை போராட்டத்தில் சாகும் வரை இருப்பேன். விவாயிகளின் நலன் கருதி உடனடியாக தண்ணீரை திறந்து விட வேண்டும்” என தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயி அறிஞருடன் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி அழைத்துச் சென்றனர்.
இதையும் படிங்கள்: இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம்.. முதலமைச்சர் கேள்வி - அதிமுக வெளிநடப்பு!