தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதற்கான தீவிர பரப்புரையில் அனைத்து கட்சியினரும் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக, திருச்சி நாடாளுமன்றத் தொகுதியின் அமமுக வேட்பாளர் சாருபாலா தொண்டைமான், புதுக்கோடை நகர்ப்புறப் பகுதிகளில் இன்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது நமது ஈடிவி பாரத் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “கஜா புயலின்போது பிரதமர் மோடிக்கு வந்து பார்க்க நேரமில்லை. ஆனால், திருமண விழாவில் பங்கேற்க நேரமிருக்கிறது. மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் நாடு, மோசமான நிலைக்கு தள்ளப்படும். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியை டிடிவி தினகரனால் மட்டுமே மீண்டும் கொண்டுவர முடியும். புதுக்கோடை மாவட்ட மக்களுக்கு எவ்வித பயனும் இதுவரை முழுமையாக சென்றுசேரவில்லை. மக்களுக்கு எந்தவித நலன்களையும் செய்யாமல் பணத்தின் நோக்கத்திற்கே மாநில அரசு அரசியல் செய்து கொண்டிருக்கிறது. புதுக்கோட்டை மன்னர் தொண்டைமான், மக்களுக்கு எவ்வளவு நன்மைகளை செய்தாரோ அதுபோல் நானும் செய்வேன். ஏற்கனவே, நான் திருச்சி மேயராக இருந்தபோது செய்துள்ள பணிகளை மக்கள் நினைவில் வைத்துள்ளனர். ஆகவே, எனக்கு வெற்றிவாய்ப்பு பிராகசமாக இருக்கிறது” என தெரிவித்தார்.