புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முள்ளூர் ஊராட்சியில் உள்ள அரசுப் பள்ளியில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தினை சுற்றச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார். பின் அரசுப் பள்ளியில் மாணவ, மாணவிகளோடு உணவு பரிமாறி மாணவ, மாணவிகளுக்கு உணவை ஊட்டி அவர்களோடு உணவு அருந்தினார். முதல்வரின் காலை உணவுத் திட்டம் புதுக்கோட்டை மாவட்டத்தில் 1327 பள்ளிகளில் இன்று தொடங்கப்பட்டது. இதே போன்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திருமயம் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இதன் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,327 அரசு பள்ளிகளில் படிக்கும் 70 ஆயிரத்து 987 மாணவ மாணவிகளுக்குப் பயன் பெறுகின்றனர்.
பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மெய்யநாதன் பேசியதாவது,"இந்தியாவில் எந்த மாநிலமும் செயல்படுத்தாத திட்டமாக முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தமிழகத்தில் மட்டும் தான் செயல்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இந்தாண்டு கூடுதலாக 50 அரசு மேல்நிலைப் பள்ளிகள் பசுமை பள்ளிகளாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காவேரி தென்பெண்ணை உள்ளிட்ட ஆறுகளில் சாயப்பட்டறை கழிவு நீர் கலக்காமல் தடுப்பதற்குச் சிறப்பு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் "நடந்தாய் வாழி காவேரி" திட்டத்தின் மூலமாகவும் கழிவு நீர் மற்றும் திடக்கழிவுகளால் மாசடைந்துள்ள காவிரியை மீட்டெடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது மேலும் இந்த திட்டத்தின் மூலம் ரூபாய் 1,885 கோடி மதிப்பில் பொது சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டுவதற்கு மத்திய அரசிற்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் மத்திய அரசு ஒப்புதல் கிடைத்தவுடன் பொது சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டப்பட உள்ளன எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "காலை உணவு திட்டத்திற்கு பிறகு மாணவ மாணவிகளின் வருகை அதிகரித்துள்ளது" - அமைச்சர் துரைமுருகன்
மேலும் தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பிளாஸ்டிக் பாட்டில்களால் ஏற்படும் தீமைகள் குறித்து அறிய வேண்டும் என்பதற்காக பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று நான் வேண்டுகோள் விடுத்து இருந்தேன். அதன்படி தமிழகத்தில் தற்போது பள்ளிகளில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் பயன்படுத்தப்படுவது வெகுவாக குறைந்துள்ளது. விரைவில் அவர்களுக்கு உலோகத்தால் ஆன தண்ணீர் பாட்டில்கள் கிடைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
243 இடங்களில் பயோ மைனின் மூலமாக குப்பை கிடங்குகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு இரண்டரை ஆண்டு காலங்களில் 53 இடங்களில் உள்ள குப்பைக் கிடங்குகள் பயோ மைனிங் மூலமாக அகற்றப்பட்டு உயிர் நிலங்களாக மீட்கப்பட்டுள்ளது விரைவில் அனைத்து குப்பை கிடங்குகளும் அகற்றப்பட்டு உயிர் நிலங்களாக மீட்கப்படும் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: காலை உணவுத்திட்டம் விரிவாக்கம் - உணவு பரிமாறி மாணவர்களுடன் உணவருந்திய முதல்வர் ஸ்டாலின்!