புதுக்கோட்டை சத்தியமங்கலம் பசும்பொன் நகரைச் சேர்ந்தவர் சுரேஷ் (30). இவர் அனைத்து இந்திய இளைஞர் பெருமன்றத்தின் நிர்வாகியாக இருந்தார். இவருடைய மனைவி கல்லூரி பேராசிரியை.
அவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த ப்ளஸ் 2 படிக்கும் பள்ளி மாணவி ஒருவர் டியூஷன் வந்துள்ளார். இந்நிலையில் மாணவியிடம் சுரேஷ் ஆசை வார்த்தைகள் கூறி அவரிடம் பலமுறை உல்லாசமாக இருந்ததால், மாணவி கர்ப்பம் அடைந்தார். பின் கர்ப்பத்தை கலைப்பதற்கு சுரேஷ், மாணவிக்கு மாத்திரைகள் வாங்கி கொடுத்துள்ளார். இதனால் மாணவியின் கர்ப்பம் கலைந்தது. ஆனால் பலவித உடல் உபாதைகள் மாணவிக்கு வந்தது.
இதுகுறித்து அவரது பெற்றோர் மாணவியிடம் கேட்டபோது, மாணவி நடந்ததை கூறியுள்ளார். இதனையடுத்து மாணவியின் பெற்றோர் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு புகார் அளித்தார். அப்புகாரின் பேரில் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சுரேசை கைது செய்தனர்.
இவ்வழக்கானது புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது. இன்று (மே.05) இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி முனைவர் சத்யா, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காகவும் மற்றும் கர்ப்பத்தை கலைத்ததற்காக ஆயுள் தண்டனையும், மாணவியின் பெற்றோருக்கு கொலை மிரட்டல் விடுத்ததற்கு மூன்று ஆண்டுகால கடுங்காவல் தண்டனையும், மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்ததற்காக, மேலும் இரண்டு ஆண்டுகள் தண்டனை மற்றும் 2 லட்சத்து 70 ஆயிரம் அபராதமும் சுரேஷுக்கு விதித்து தீர்ப்பளித்தார். பின்னர் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 5 லட்சம் இழப்பீடு வழங்குமாறு அரசுக்கு உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: கிணறு அருகே மது அருந்திக் கொண்டிருந்த இளைஞர் பிணமாக மீட்பு!