புதுக்கோட்டை: இறையூர் ஊராட்சிக்குட்பட்ட வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியில் மலம் கலந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் தமிழக காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடி காவல்துறைக்கு மாற்றப்பட்டது. கடந்த 190 நாட்களுக்கும் மேலாக சிபிசிஐடி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதுவரை சிபிசிஐடி காவல்துறையினர் இறையூர், வேங்கைவயல், காவேரி நகர், கீழ முத்துக்காடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 153 நபர்களிடம் விசாரணை செய்து உள்ளனர்.
இந்நிலையில் குடிநீர் தொட்டியில் சேகரிக்கப்பட்ட நீரினை ஆய்வுக்கு உட்படுத்தியதில் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டது மனித கழிவுதான் என்பது உறுதியானதை தொடர்ந்து சிபிசிஐடி காவல்துறையினர் புதுக்கோட்டை வன்கொடுமைத் தடுப்பு கூடுதல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இதன் அடிப்படையில் 11 நபர்களிடம் டிஎன்ஏ பரிசோதனை நடத்த வேண்டும் என்றும் இவர்களின் டிஎன்ஏ சோதனை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி உதவிப்பேராசிரியர் தலைமையில் நடத்தப்பட வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த உத்தரவையடுத்து கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி சிபிசிஐடி காவல்துறையினர் கூறிய வேங்கைவயல் பகுதியைச் சேர்ந்த 9 நபர்களிடமும், காவிரி நகர் மற்றும் கீழ முத்துக்காடு பகுதியைச் சேர்ந்த ஒருவரிடமும் டிஎன்ஏ சோதனைக்காக ரத்த மாதிரி எடுக்கப்பட இருந்தது. இதில் காவேரி நகர் பகுதியைச் சேர்ந்த காசி, ஆயுதப்படை பயிற்சி காவலர் முரளி ராஜா, கீழ முத்துக்காடு பகுதியைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் முத்தையா ஆகியோருக்கு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது. மீதமுள்ள 8 பேர் ரத்த மாதிரி கொடுக்க மறுப்புத் தெரிவித்து, நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்தனர்.
இதையடுத்து மீண்டும் நீதிமன்றத்தை நாடிய சிபிசிஐடி போலீசார், புதிதாக மேலும் 10 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள அனுமதி கோரினர். இதையடுத்து நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கீழ முத்துக்காடு, மேல முத்துக்காடு, வேங்கைவயல் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த மேலும் 10 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனைக்காக ரத்த மாதிரி சேர்க்கப்பட்டது. இந்நிலையில் டிஎன்ஏ பரிசோதனை செய்ய மறுப்பு தெரிவித்த 8 பேரும் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று ஆஜராகினர்.
நீதிமன்றத்தில் ஆஜரான 8 பேரிடம் கடந்த 30ஆம் தேதி விசாரணை நடத்திய நீதிபதி ஜெயந்தி, சிபிசிஐடி டிஎன்ஏ பரிசோதனை எடுக்கப்படுவதற்கான அளித்த விளக்க கடிதத்தை அளித்தார். கடிதத்தை பெற்றுக் கொண்ட 8 பேரும் நீதிபதியிடம் கடிதம் ஆங்கிலத்தில் உள்ளது என்றும்ல் இதை உடனடியாக எங்களுக்கு படிக்க தெரியாது என்றும் தெரிவித்தனர்.
இதையடுத்து அவர்களின் கோரிக்கையை ஏற்ற நீதிபதி, சம்பந்தப்பட்ட 8 பேருக்கும் ஒருநாள் கால அவகாசம் கொடுத்து கடந்த ஜூலை 1ஆம் தேதி இதே நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிட்டார். இதையடுத்து இரண்டாவது நாளாக நீதிமன்றத்தில் ஆஜரான 8 பேரும் எழுத்துப்பூர்வமான விளக்கக் கடிதத்தை அளித்தனர். அதில் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள தங்களுக்கு சம்மதம் இல்லை எனவும், தங்களது கோரிக்கை குடிநீர் தொட்டியில் மலத்தை கலந்தது யார் என கண்டுபிடிக்க வேண்டும் என்பதாகும், அதை விட்டுவிட்டு தங்களுக்கு டிஎன்ஏ பரிசோதனை எடுப்பது எந்த விதத்தில் நியாயம் எனவும், வழக்கை இழுத்தடிப்பதற்காகவே இந்த டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்வதாகவும், இது போன்ற டிஎன்ஏ பரிசோதனை உலகில் வேறு எங்கும் நடக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
இதைக் கேட்டுக்கொண்ட நீதிபதி சம்பந்தப்பட்ட 8 பேரும் வரும் ஜூலை 4ஆம் தேதி (இன்று) மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து பரிசோதனை செய்து கொள்ள மறுப்பு தெரிவித்த, இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 8 பேரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் ஆயினர்.இதனைத் தொடர்ந்து 8 பேருக்கும் கண்டிப்பாக டிஎன்ஏ பரிசோதனை எடுக்க வேண்டும் என்று புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமைத் தடுப்புச் சட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த 8 பேரும் நாளை (ஜூலை 5) காலை 10 மணியளவில் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள நீதிபதி ஜெயந்தி உத்தரவு பிறப்பித்தார்.
இதையும் படிங்க:புல்லட் - பொலிரோ நேருக்கு நேர் மோதல்... கிணற்றில் கார் விழுந்து 6 பேர் பலி!