புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தேர்தல் கலந்தாய்வு கூட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது. அதில், அக்கட்சியின் தேசிய செயலாளரும் தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளருமான சஞ்சய் தத் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மத்திய பாஜக அரசு விவசாயிகளுக்கு எதிரான மசோதாவை கொண்டு வந்துள்ளது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பெரும் எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
ஆனால், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் தாங்கள் ஒரு விவசாயி என்று தமிழ்நாடு முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டி கொள்கின்றனர். விவசாயிகளுக்கு எதிரான மசோதாக்களை எதிர்க்காமல், அவர்கள் ஆதரித்து வருகின்றனர்.
நாடு முழுவதும் குறிப்பாக தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள், குற்றச் சம்பவங்களை கண்டித்து வரும் 9ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற உள்ளது. அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இந்தப் போராட்டம் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு அமைச்சர்கள் அனைவரும் அவர்களது துறையில் ஊழல் செய்து வருகின்றனர். இதனாலேயே மத்திய அரசுக்கு அடிமைகளாக இருக்கின்றனர். தமிழ்நாடு அரசு ஏழை, நடுத்தர மக்களுக்கு எதிரானது. 2021 தேர்தலில் கண்டிப்பாக திமுக- காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்று ஸ்டாலின் முதலமைச்சராவது உறுதி. திமுக கூட்டணியில் காங்கிரஸ் எவ்வளவு தொகுதியை கேட்டு பெறுவது என்பது முக்கியமல்ல. தற்போதுள்ள ஆட்சியை அகற்றுவதுதான் முக்கியம்" என்றார்.
இதையும் படிங்க: 'அதிமுக - பாஜக கூட்டணி தாக்கத்தை ஏற்படுத்தாது' : சஞ்சய் தத்