புதுக்கோட்டை: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், சிவகங்கை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி மற்றும் திருமயம் சட்டமன்ற தொகுதியில் தனது பாராளுமன்ற தொகுதி நிதியில் இருந்து செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யாவை, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சந்தித்து ஆலோசனை செய்தார்.
பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ள திட்டங்கள் தற்போது எத்தனை சதவீதம் நிறைவடைந்து உள்ளது. நிதிகள் போதுமானதாக உள்ளதா என்பது குறித்தும் கேட்டறிந்தார். இதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஹிந்தியில் பெயர் வைக்க வேண்டாம் என்று கூறவில்லை. ஆங்கிலத்தில் சட்டம் இயற்றிய போது ஆங்கிலத்தில் தான் பெயர் வைக்க வேண்டும்.
இதையும் படிங்க: "கச்சத்தீவை தாரை வார்த்தது காங்கிரஸ் தான்" - மத்திய அமைச்சர் எல்.முருகன் பேட்டி!
ஆங்கிலத்தில் தான் வரைவு சட்டம் தயார் செய்யப்படுகிறது. ஆங்கிலத்தில் எழுதி ஹிந்தியில் மொழிபெயர்க்கிறார்கள். நீதிமன்றங்களில் ஆங்கிலத்தில் சட்ட மொழிபெயர்ப்பு தான் பெரும் பகுதி பயன்படுத்தப்படுகிறது. ஹிந்தியில் மொழிபெயர்ப்பு இருந்தால் இதற்கு ஆங்கிலத்தில் என்ன சொல், என்ன பிரிவு என்று நீதிபதிகளே கேட்கும் நிலை தற்போது உள்ளது. ஆங்கிலத்தில் சட்டத்தை இயற்றிவிட்டு பெயர் மட்டும் ஹிந்தியில் வைக்கிறார்கள்.
திமுகவின் உண்ணாவிரதப் போராட்டம் சாத்தியம். நீட் விலக்கு வேண்டும் என்பது நியாயம் தானே. தமிழகத்திற்கு நீட் விலக்கு வேண்டும் என்று பல காரணங்களை நான் ஏற்கனவே கூறியுள்ளேன். மத்திய அரசு அசைந்து கொடுப்பது போன்று எனக்குத் தெரியவில்லை.
வருமான வரி தாக்கல் செய்யும் சதவீதம் கடந்த 9 ஆண்டுகளில் உயர்ந்துள்ளது. என்றும் 2014 ஆம் ஆண்டு சராசரி வருமான வரி தாக்கல் செய்பவரின் வருமானம் 4.4லிருந்து 13 லட்சமாக உயர்ந்துள்ளது. பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளதை இது காட்டுகிறது என்று பிரதமர் நேற்று சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளது குறித்து கேட்கப்பட்டது.
அதற்கு, ஆண்டுக்கு ஆண்டு வருமான வரி தாக்கல் செய்பவர்களை எண்ணிக்கை அதிகமாக தான் இருக்கும். இந்தியாவில் சுதந்திரத்திற்குப் பிறகு எந்த ஆண்டு பொருளாதாரம் உயரவில்லை. ஆண்டுக்கு இரண்டு சதவீதம் முதல் 3 சதவீதம் வரை பொருளாதார உயர்ந்து கொண்டு தான் உள்ளது" எனத் தெரிவித்தார்.