புதுக்கோட்டை: மத்தியில் ஆளும் பாஜகவின் 9 ஆண்டு கால சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில பாஜகவினரால் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில்,நேற்று (ஜூன் 24) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கீரமங்கலத்தில் புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட பாஜக அணிகள் சார்பில் மத்திய அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த பொதுக்கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக முன்னாள் இந்திய ராணுவத் தளபதியும், உத்திரப்பிரதேச மாநிலத்தின் காசியாபாத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் கலந்து கொண்டார்.
அப்போது அமைச்சர் வி.கே.சிங் பேசுகையில், “கடந்த காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ஊழல்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஒரு அங்கமாக இருந்தனர். திமுக ஒரு குடும்ப கட்சி. இதுதான் ஆளும் கட்சியாக உள்ளது. ஆனால் பாஜக தேச மக்களுக்கான கட்சியாக உள்ளது. அதனால்தான் பாஜகவில் பல்வேறு பிரிவுகளுக்கும் தனி அணிகள் அமைத்து செயலாற்றி வருகிறது. பாஜக அணிகள் ஒன்றிணைந்து மக்களைச் சந்திக்க வேண்டும். வெற்றியைத் தேடித் தர வேண்டும்” என கூறினார்.
அதேபோல், உலகிலேயே சூரிய சக்தி மின்சாரம் பயன்படுத்தும் முதன்மை நாடாக இந்தியா உள்ளது எனவும், தொழில்நுட்பத்திலும் வளர்ந்துள்ளது எனவும் குறிப்பிட்டார். உலகளவில் நடைபெறும் ஆன்லைன் வர்த்தகம் மற்றும் பணப்பரிமாற்றத்தில் இந்தியா மட்டுமே 50 சதவீதம் அளவில் பங்காற்றுகிறது என தெரிவித்தார்.
இதையும் படிங்க:எலும்பும் தோலுமாக மெலிந்து காட்சியளிக்கும் அரிசிக் கொம்பன் யானை? - வனத்துறை அதிகாரிகள் சொல்வது என்ன?
மேலும் பேசிய அவர், “இந்திய அளவில் ஊழலை ஒடுக்கவே அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்டது. ஊழலை தடுக்கவே தமிழ்நாட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தினர். நமது நாட்டின் எல்லைகளை பாதுகாப்பாக மாற்றி உள்ளோம். 2 ஆண்டுகளுக்கு முன்பு சீனா போரில் உடனடி பதிலடி கொடுத்து 100 சீன வீரர்களை வீழ்த்தினோம். நீங்கள் உறுதியாக நம்புங்கள். பாதுகாப்பான, சக்திமிக்க அரசாக மோடி அரசு உள்ளது” என்றார்.
மேலும் அவர் பேசுகையில், “ஆலங்குடி தொகுதி மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் பாதிப்பாக இருந்து வரும் சுற்றுச்சூழல், நீர் ஆதாரத்தை பாதிக்கும் தைல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். சுற்றுச்சூழலை பாதுகாக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். மண்ணையும், நீர் ஆதாரத்தையும் பாதுகாக்க தைல மரங்கள் அழிக்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.
மத்திய அரசு வரியில் 60 சதவீதம் மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது. மாநில அரசிடம் கேளுங்கள் எங்கள் வரிப்பணம் என்னாச்சு என்று பேசியவர் 'புரிஞ்சுதா' என்று கூட்டத்தினரை நோக்கி தமிழில் கேட்டதும் கூட்டத்தினர் குரல் உயர்த்தினர். திமுகவைப் போல குடும்ப கட்சியாக இல்லாமல் அனைத்து தரப்பு மக்களின் நலனுக்காகவும் பாடுபடுவதால்தான் பாஜகவில் இத்தனை பிரிவு அணிகள் இருக்கின்றன என்றார்.
இதையும் படிங்க:ஹெலிகாப்டர் பிரதர்ஸ் நிதி மோசடி... லஞ்சம் வாங்கிய காவலர்கள் மீது வழக்குப்பதிவு