புதுக்கோட்டையில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குசாலக்குடி எனும் கிராமம் மண்பாண்டங்களுக்கென பெயர்பெற்றது. கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு அனைவரும் மண்பாண்டங்களில் மட்டும் தான் உணவுகளை சமைத்து உண்டு வந்தனர். அதனால் மண்பாண்ட தொழிலுக்கு நல்ல ஆதரவு இருந்து வந்தது.
ஆனால் நவீன மயமாக்கப்பட்ட இந்தகாலத்தில் விதவிதமான ரகங்களில் சில்வர்,பிளாஸ்டிக்,செராமிக் போன்ற மூலப் பொருள்களினால் ஆன பாத்திரங்களின் வருகையால், மண்ணால் ஆன பொருட்களை யாரும் வாங்குவதற்கு விரும்புவதில்லை. இருப்பினும் கார்த்திகை விளக்குகள் செய்து விற்கலாம் என்று எண்ணினால் மண்பாண்டம் செய்ய தேவைப்படும் கரம்பை மண் கிடைப்பது அரிதாக இருக்கிறது.
அப்படியே கிடைத்தாலும் ஒரு லோடு மண் 10ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால் மண்பாண்ட தொழிலாளர்கள் மிகவும் நலிவடைந்த நிலையில் தள்ளப்பட்டுள்ளனர். காலம் காலமாக விதவிதமான மண்பாண்டம், விளக்குகள், மண்ணால் ஆன பொருட்களை உருவாக்கி விற்பனை செய்து வந்தோம். தற்போது அரசாங்கம் மண் எடுப்பதற்கும் அனுமதி தர மறுத்து வருகிறது.
மேலும் கோயில்களில் விளக்கு ஏற்றக் கூடாது என்ற அறிவிப்பை தொடர்ந்து விளக்கு வியாபாரமும் குறைந்துவிட்டது. இந்நிலையில், எங்களுக்கு இந்த தொழில் மட்டும் தான் தெரியும். இந்தத் தொழிலை மட்டுமே நம்பியிருக்கும் மக்களுக்கு அரசாங்கம் ஏதேனும் உதவி செய்தால் நன்றாக இருக்கும் என்று மண்பாண்ட தொழிலாளி மருதமுத்து தெரிவித்தார்.