தமிழ்நாடு முழுதும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில நேற்று புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் அச்சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தங்கள் வங்கிக் கணக்குகளில் உள்ள பணத்தை எல்லாம் திரும்பப் பெறும் போராட்டத்தில் அங்குள்ள இஸ்லாமிய மக்கள் ஈடுபட்டனர்.
இதுபற்றி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், ’கறம்பக்குடி ஷாகீன்பாக் போராட்டம் தொடர்ந்து 22 நாள்களாக நடந்து கொண்டிருக்கிறது. கறுப்பு பலூன் பறக்க விடுதல், வாயில் கறுப்புத் துணி கட்டிக் கொள்ளுதல் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான நூதனப் போராட்டங்களை நடத்தி வருகிறோம்.
அந்த வகையில் வங்கிகளில் எங்கள் சேமிப்புக் கணக்குகளில் இருக்கும் பணத்தைத் திரும்ப எடுத்துக் கொள்வது என்று முடிவெடுத்து, ஐஓபி, இந்தியன் வங்கி ஆகிய இரு வங்கிகளிலும் பணத்தைத் திரும்பப் பெற்றோம்" என்றனர்.
இதுதொடர்பாக வங்கி மேலாளர் கூறுகையில், ' உங்களைப் போன்ற மக்களின் டெபாசிட் பணத்தை நம்பி தான் வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. பணத்தை எடுத்தால் வங்கிகளின் செயல்பாடு பாதிக்கப்படும். அதனால் பணத்தை எடுக்க வேண்டாம்' என்று கோரிக்கை வைத்தார்கள்.
அலுவலர்களின் வேண்டுகோளை காதில் போட்டுக்கொள்ளாமல், தங்கள் பணத்தை போராட்டக்காரர்கள் எடுத்துக்கொண்டனர். இதன் மூலம் ஒரே நாளில் ஒரு கோடி ரூபாய் பணம் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
நிதியாண்டின் இறுதி மாதமான மார்ச்சில் டெபாசிட் தொகையினை வாடிக்கையாளர்கள் திரும்பப் பெற்றுக்கொண்டதால் வங்கிகள் கலக்கம் அடைந்துள்ளன.
இதேநிலை நாடு முழுவதும் தொடருமானால் வங்கிகளின் நிலை, வர்த்தகம், பொருளாதாரத் துறைகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் என வங்கி அலுவலர்களின் தரப்பில் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சிஏஏவிற்கு எதிராக இஸ்லாமியர்கள் விடிய விடிய சாலை மறியல்!