புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள அணவயல் ஜீவா நகரைச் சேர்ந்த துரைச்சாமியின் மனைவி பொன்னம்மாள் (105). இத்தம்பதிக்கு மூன்று மகன்கள்.
இருவரும் தங்கள் குழந்தைகளைப் படிக்க வைத்து, அவர்களது வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருந்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் துரைச்சாமி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு பின்னர், பொன்னம்மாள் தன் மகன்களின் வயலுக்கு சென்று விவசாய வேலைகளில் ஈடுபட்டார். தான் உயிரிழக்கும் வரை தன் கையே தனக்கு உதவி என்றே பொன்னம்மாள் வாழ வேண்டும் என உறுதியாக இருக்கிறார்.
இன்றும், தன் தேவைகளைத் தானே பூர்த்தி செய்து கொள்கிறார். நான்கு தலைமுறை கண்ட பொன்னம்மாளுக்கு, தற்போது பேரன், பேத்தி, கொள்ளு பேரன், பேத்தி, எள்ளு பேரன் உள்பட 20க்கும் மேற்பட்ட பேரன், பேத்திகள் உள்ளனர்.
இந்தாண்டு தங்களது தாய் பொன்னம்மாளின் 105வது பிறந்த நாளை வெகுவிமரிசையாகக் கொண்டாட நினைத்தக் குடும்பத்தினர், இதற்காக அழைப்பிதழ் முதல் அனைத்து ஏற்பாடுகளையும் தடபுடலாகச் செய்து முடித்தனர்.
இன்று (டிச.6) குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் சூழ கறி விருந்துடன் பொன்னம்மாள் பாட்டிக்கு பிறந்தநாள் விழா கொண்டாப்பட்டது. இதில் பேரன், பேத்திகள், மகன்கள் உள்பட உறவினர்கள் பாட்டியிடம் ஆசிர்வாதம் பெற்றனர்.