புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் 6வது புத்தகத் திருவிழா பிரமாண்டமாக தொடங்கியது. இதில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு, புத்தக கண்காட்சியைப் பார்வையிட்டார். இந்த புத்தகத் திருவிழா இன்று (ஜூலை 28) தொடங்கி வரும் ஆகஸ்ட் 6ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டு, கதை, கவிதை, வரலாற்று நூல்கள், இதிகாசங்கள், அரசியல் தலைவர்களின் சுயசரிதை புத்தகங்கள், அறிவியல் சார்ந்த புத்தகங்கள், மாணவர்கள், சிறுவர் சிறுமியர், மகளிருக்கான புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், குறிப்பாக சிறைத்துறை சார்பில் “சிறைக்குள் வானம்” என்ற தலைப்பில் தனி அரங்கம் அமைக்கப்பட்டு, பொதுமக்களிடமிருந்து புத்தகங்கள் பெறப்பட்டு அந்த புத்தகங்கள் சிறைக்கைதிகளுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா ஆகியோர் கலந்து கொண்டு புத்தகத் திருவிழாவை தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக வருகை தந்த சட்டத்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களுக்கு மாணவர்கள் சார்பில் மாறுவேடம் அணிந்தும், சிலம்பம் சுற்றியும், புத்தக வடிவிலான வேடம் அணிந்தும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ''சிறைச்சாலைகளில் கைதிகள் மனம் திருந்தி வாழ வேண்டும் என்பதற்காகப் பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு சிறைத்துறை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக நூலகங்களின் தரம் உயர்த்தப்பட்டு கூடுதல் புத்தகங்கள் வாங்கி வைக்கப்படுகின்றன.
அதுமட்டுமின்றி சென்னையில் தொடங்கிய புத்தக கண்காட்சி உட்பட அதன் பின்பு நடைபெறும் அனைத்து புத்தக கண்காட்சியிலும் ‘சிறைக்குள் வானம்’ என்ற ஒரு அரங்கம் அமைக்கப்பட்டு பொதுமக்களிடமிருந்து புத்தகங்கள் பெறப்பட்டு, அது சிறைக்கைதிகளுக்கு வழங்கப்படுகிறது. இரு கைகளும் புத்தகங்களை வாங்கிப் படிக்கும் போது அவர்களுக்கு மனதளவில் மாற்றம் ஏற்படுகிறது.
அதேபோல் சிறையில் உள்ள கைதிகள் வீட்டில் உள்ளதுபோல் மனநிலையை உணரும் வகையில் அவர்களுக்கு விளையாட்டு, யோகா உள்ளிட்டப் பல்வேறு பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகிறது. சிறைக் கைதிகள் தங்களது குடும்பத்தினருடன் வீடியோ கால் மூலமாக பேசுவதற்கான நடவடிக்கைகளை சிறைத்துறை மேற்கொண்டு வருகிறது’ என்றார்.
இதையும் படிங்க:திருச்சி விவசாயிகள் அரை நிர்வாண காத்திருப்பு போராட்டம் - ஏன்?