புதுக்கோட்டை மாவட்டம் நகர காவல் சரகத்தில் கடந்த மார்ச் 21ஆம் தேதியன்று அனுமதியின்றி தடைசெய்யப்பட்ட போதை மாத்திரைகள், போதை ஊசிகளை சட்டவிரோதமாக விற்பனைசெய்த பாண்டி (25), விக்னேஷ் (23), பாஸ்கர் (34), அச்சுதன் (34) ஆகிய நான்கு பேர் உள்பட ஏழு பேரை நகர காவல் ஆய்வாளர் குருநாதன் கைதுசெய்தார்.
இது தொடர்பாக நகர காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கைதுசெய்யப்பட்டவர்கள் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பரிந்துரையின்பேரில் மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி ஆணையின்படி குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு நேற்று (ஏப்ரல் 11) திருச்சி மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் இதுபோன்று தடைசெய்யப்பட்ட போதை ஊசிகள், போதை மருந்துகளை சட்டவிரோதமாக விற்பனை செய்பவர்கள் எவரேனும் இளஞ்சிறார்கள், இளைஞர்களை போதை பழக்கத்திற்கு அடிமையாக்கும் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கடும் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.
இதையும் படிங்க: கரோனா குறித்து முதலமைச்சர் இன்று ஆலோசனை: வருகிறது கடுமையான கட்டுப்பாடுகள்?