தமிழ்நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து முடிந்த நிலையில், கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து விடைத்தாள்கள் திருத்தும் பணி இன்று (மே-27) நடைபெறுமென்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் விடைத்தாள்கள் திருத்துவதற்கான மையங்களில் முன்னேற்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு விடைத்தாள்கள் திருத்தும் ஆசிரியர்களுக்கான அடிப்படை வசதிகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் மான்போர்ட் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, ஜெயங்கொண்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியிள் 36 ஆயிரத்து 12 விடைத்தாள்கள் திருத்தும் பணி இன்று தொடங்கியது.
பணி நடைபெறுவதற்கு முன் ஆசிரியர்களுக்கு முகக் கவசம், கைகளைக் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்த பின்னரே அரைக்குள் அனுமதிக்கப்பட்டனர். பள்ளி முழுவதும் அரியலூர் நகராட்சி சார்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் விடைத்தாள் திருத்தும் பணி 4 மையங்களிலும், அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் 2 மையங்களிலும் என மாவட்டத்தில் மொத்தம் 6 மையங்களில் ஆயிரத்து 250 ஆசிரியர்கள் விடைத்தாள் மதிப்பீட்டு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாடு அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள வழிமுறைகளின்படி, விடைத்தாள் திருத்தும் பணி செய்ய வரும் ஆசிரியர்களுக்கு கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பின் மருத்துவக் குழு மூலம் வெப்பமானி கருவி கொண்டு பரிசோதிக்கப்பட்டது.
மேலும் தகுந்த இடைவெளியை பின்பற்றி ஒரு அறைக்கு 8 நபர்கள் வீதம் இருக்கைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. விடைத்தாள் மதிப்பீடு செய்யப்படும் அனைத்து அறைகளும் இருவேலைகள் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்றவர்களை மீட்டுத் தரக்கோரி ஆட்சியரிடம் மனு!