மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு உள் இடஒதுக்கீடு வழங்க ஆளுநர் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் தற்போது மருத்துவக் கலந்தாய்வு நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பயின்ற 11 மாணவர்கள் 2020-2021ஆம் ஆண்டிற்கான 7.5 சதவீத அரசு உள் ஒதுக்கீட்டின் அடிப்படையில் சென்னையில் இன்று (நவ. 18) நடைபெற்ற இளங்கலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வில் கலந்துகொண்டனர்.
அதில், புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவிகள் ஏ. திவ்யா, எம். பிரசன்னா ஆகியோர் மதுரை அரசு மருத்துவக்கல்லூரியையும், புதுக்கோட்டை இராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவி எச். சுகன்யா, கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவி எம். தரணிகா ஆகியோர் தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரியினையும் கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவி சி. ஜீவிகா சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரியையும் தேர்வு செய்தனர்.
வெட்டன்விடுதி அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவர் எல். அகத்தீஸ்வரன் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரியையும்,
சிதம்பரவிடுதி அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவர் டி. கவிவர்மன் கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரியையும், அரிமளம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவி பி. புவனேஸ்வரி வேலூர் அரசு மருத்துவக்கல்லூரியையும் தேர்வு செய்துள்ளார்கள்.
இதேபோல் கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவர் ஆர். ஹரிகரன், தாந்தாணி அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவி எம். கிருஷ்ணவேணி, மழையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவர் கே. பிரபாகரன் ஆகியோர் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியையும் தேர்வு செய்துள்ளனர்.
இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி, முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலெட்சுமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: தனியார் கல்லூரியைத் தேர்ந்தெடுத்த அரசுப் பள்ளி மாணவர்களுக்காக புதிய திட்டம்