புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள அரசுப் பள்ளிகளில் நாகுடி, கட்டுமாவடி, ஆவுடையார்கோவில், சுப்ரமணியபுரம் ஆகிய ஊர்களிலிருந்து பல்வேறு மாணவ, மாணவியர்கள் படித்து வருகின்றனர். இதில், சில ஊர்களில் உள்ள பள்ளிகளுக்கு மாணவர்களின் ஊர்களிலிருந்து நேரடியாகச் செல்ல பேருந்து வசதியில்லை.
இதனால் அம்மாணவர்கள் அறந்தாங்கிக்கு வந்து பின் தங்கள் பள்ளிகள் இருக்கும் ஊர்களுக்குச் செல்லும் அவலநிலை நீண்ட காலமாக நீடித்து வருகிறது. பேருந்து வசதி இல்லாததன் காரணமாக ஒரே பேருந்தில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிருக்கு ஆபத்தான பயணத்தை மேற்கொள்கிறார்கள்.
அரசு விதியின்படி, ஒரு பேருந்தில் 45+2 நபர்களே பயணிக்க வேண்டும். ஆனால் இந்தப் பேருந்தில் 100க்கும் மேற்பட்ட மாணவர்களை ஏற்றிச் செல்வது முறையா, இப்படி ஏற்றிச் சென்று பெரும் விபத்தோ அல்லது உயிர் சேதம் ஏற்பட்டால்தான் பேருந்துகளில் அனுமதிக்கப்பட்ட பயணிகளை மட்டும் பயணிக்க வேண்டும் என்ற சட்ட விதியை அரசு செயல்படுத்துமா போன்ற பல கேள்விகளை சமூக செயற்பாட்டாளர்கள் முன்வைக்கின்றனர். மேலும் இந்த வழியாக பள்ளி நேரங்களில் மட்டும் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என மாணவர்களும் பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: பேருந்தின் மேற்கூரையில் ஒழுகிய மழைநீர்: பயணிகள் அவதி!