பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் நாட்டார்மங்கலம் கிராமத்தில் சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நாட்டார்மங்கலம் கிராமத்தைச் சுற்றி ஈச்சங்காடு, மருதடி, கூத்தனூர் உள்ளிட்ட கிராமங்களும் மலைகளால் சூழ்ந்து காணப்படுகின்றன.
இந்த கிராமங்களில் செல்போன் கோபுர வசதி இல்லாத காரணத்தால் சிக்னல் கிடைக்காமல் மக்கள் சிரமப்பட்டு வந்தனர். இந்த கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அவசர தேவைக்குக் கூட யாரையும் தொடர்பு கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் அவசர நேரங்களில் ஆம்புலன்ஸ் வாகனத்தை அழைப்பதற்காகப் பல கிமீ தொலைவு சென்று செல்போனில் பேசும் நிலை உள்ளது.
தற்போது கரோனா ஊரடங்கு காரணமாகப் பள்ளிகள் திறக்கப்படாத காரணத்தினால் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் நாட்டார்மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் இணைய வசதி கிடைக்காமல் ஆன்லைன் வகுப்புகளில் பங்கு பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் செல்போன் சிக்னல் கிடைக்காமல் தங்களுடைய வீட்டின் மொட்டை மாடியிலும் கூரை அமைத்து ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கின்றனர்.
எனவே இந்த பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க வேண்டும் என அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பல வருடங்களாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் அதற்கான எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனிடையே இணைய வசதி இல்லாமல் அவதியுறும் நாட்டார்மங்கலம் மாணவர்கள் குறித்து நமது ஈடிவி பாரத் ஊடகத்தில் அக்டோபர் 6ஆம் தேதி செய்தி வெளியானது. அதன் பலனாக பொது மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்த கோபுரம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
இதற்கு இடங்கள் தேர்வு செய்யப்பட்டு பொக்லைன் மூலம் அதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் நாட்டார்மங்கலம் கிராமத்திற்கு இணைய வசதி கிடைக்கப்பெறும் என்பதால் மக்கள் மற்றும் மாணவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதையும் படிங்க:ஈடிவி பாரத் செய்தி எதிரொலி - ஏழை மாணவிக்கு ஸ்மார்ட் போன் வழங்கிய அமைச்சர்!