தமிழ்நாட்டில் கரோனா தொற்று தீவிரமடைந்துள்ளது. மூன்றாம் கட்டமான சமூகப் பரவலைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், கரோனா தொற்று பரவும் வேகம் குறைவதாக இல்லை. தமிழ்நாட்டில் இதுவரை 2,162 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று மட்டும் 104 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இருவருக்கும் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மாவட்டத்தில் ஏற்கனவே ஏழு பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் இருவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டிருப்பதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒன்பதாக உயர்ந்துள்ளது.
கரோனா உறுதி செய்யப்பட்ட இருவரில் ஒருவர் குன்னம் வட்டம் லப்பைக்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த ஒன்பது மாத கர்ப்பிணி. மற்றொருவர் அத்தியூர் கிராமத்தைச் சேர்ந்தவர். பாதிக்கப்பட்டவர்கள் வசித்த பகுதிகள் முழுவதுமாக சீல் வைக்கப்பட்டு, சுகாதாரத் துறையினரால் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.