தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மேற்பார்வை பொறியாளர் கருப்பையா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநில மின் வாரியங்கள் பிரிக்கப்படக் கூடாது, மின் விநியோகத்தை தனியாருக்கு தாரைவார்க்கக் கூடாது, மாநில அரசின் உரிமைகளை பறிக்கக் கூடாது, மின்சார சட்டத் திருத்த மசோதா 2020 வாபஸ் பெற வேண்டும், மாநில அரசால் விவசாயம், நெசவு போன்றவைகளுக்கு சமூக அக்கறையுடன் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை முடக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மின்வாரிய அலுவலர்கள் மத்திய அரசைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இந்தப் போராட்டத்தில் மின் வாரிய அலுவலர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.