பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் உள்ளது பிரசித்திப் பெற்ற மதுரகாளியம்மன் திருக்கோயில். திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் பூஜைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள், வெளி மாவட்டங்களிலிருந்து வந்து தரிசனம் செய்வது வழக்கம். இதனிடையே சிறுவாச்சூர் பகுதியையொட்டி தனியார் மருத்துவக்கல்லூரி, பொறியியல் கல்லூரி, பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் வாரசந்தை ஆகியவை உள்ளன.
சாலையின் இருபுறமும் கடைகள் அமைந்துள்ள நிலையில், சாலையை கடக்க முயற்சிக்கும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள், மாணவ-மாணவியர்கள் உள்ளிட்டோர் அடிக்கடி விபத்துக்களில் சிக்கி படுகாயமடைந்து, உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதனால், இப்பகுதியில் சாலையை கடக்க வசதியாக தரைவழி மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு கடந்த ஆண்டு மே மாதம் 14ஆம் தேதியன்று அப்போதைய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் 13 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாலம் கட்ட அடிக்கல் நாட்டினார். அப்போது பேசிய அமைச்சர், பாலம் கட்டும் பணிகள் 2019 பிப்ரவரி மாதத்துக்குள் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டுக்கு விடப்படும் என தெரிவித்தார். ஆனால், அவர் குறிப்பிட்ட நாட்கள் முடிவடைந்தும் சிறுவாச்சூரில் தரைவழி மேம்பாலப்பணிகள் தற்போது வரை தொடங்கவில்லை.
அதுமட்டுமல்லாமல், மாற்றுச்சாலை அமைக்கும் பணி கூட இதுவரை முழுமையாக நடைபெறவில்லை எனவும், இதனால் பல விபத்துக்கள் நடந்துள்ளதாக குற்றம் சாட்டிய பொதுமக்கள், சிறுவாச்சூர் தரைவழி மேம்பால பணிகள் விரைவில் தொடங்கப்பட வேண்டும் என அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.