பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று(டிச.20) நடைபெற்ற பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சிகளில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டார். வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்டவர்கள் அவர்களது ஊர்களுக்கு செல்ல கட்டணமில்லா பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், “ தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அதி கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தடையின்றி போக்குவரத்து வசதி வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்கள்.
அதன் அடிப்படையில், திருச்செந்தூர் கோயிலில் கடந்த மூன்று நாட்களாக தங்கி இருந்தவர்கள் வீடு திரும்புவதற்கு ஏதுவாக இன்று முதல் கட்டணமில்லா பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருச்செந்தூர், திருநெல்வேலி பாதை மழை வெள்ளத்தால் தடைபட்டுள்ளதால், பயணிகளை மாற்றுப்பாதையில் கன்னியாகுமரி வரை அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்று சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்பாக பெய்த கனமழையின் போது பேருந்து ஒன்று திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி வந்தபோது பாலம் முழுமையாக மழை நீரால் மூழ்கியது. இந்நிலையில் பேருந்தில் பயணித்தவர்களை மீட்டு அவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து ஏற்பாடு செய்து வழியனுப்பி வைக்கப்பட்டனர்.
கனமழையின் போது ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் மழை வெள்ளம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலில் இருந்த பயணிகளை மீட்டு அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் மூலம் மீட்டு அவர்கள் செல்லும் இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டத்தில் வெள்ளநீர் வடிந்துள்ளதால் 95% பேருந்துகள் மீண்டும் இயக்கப்பட்டு வருகிறது. திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ள நீர் படிப்படியாக வடிய துவங்கியுள்ளது. வெள்ள நீர் வடியும் பகுதிகளுக்கு ஏற்றார் போல் போக்குவரத்து சேவைகள் மீண்டும் துவக்க சம்பந்தப்பட்ட போக்குவரத்துத்துறை மேலாண்மை இயக்குநர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் பேருந்துகள் மூலம் இலவசமாக எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதையும் பொருட்படுத்தாமல் மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி போக்குவரத்து சேவையை முழுமையாக வழங்குவதில் போக்குவரத்துத்துறை பணியாளர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வருகின்றார்கள்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: 2024ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி.. எந்தெந்த தேர்வு எப்போது நடக்கும் முழு விவரங்கள் உள்ளே!