பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் அருகேயுள்ள கூடலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம், இவரது மனைவி ரஞ்சிதா. இவர்களுக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது.
இந்தத் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், செல்வம் - ரஞ்சிதாவுக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால் இவர்கள் இருவரும் அவ்வப்போது பிரிந்து வாழ்வதும் சேர்வதுமாக இருந்துள்ளனர்.
இந்நிலையில், செல்வம் வெளிநாடு சென்றிருந்தபோது ரஞ்சிதா அரியலூர் அருகேயுள்ள தாமரைக்குளம் கிராமத்தில் உள்ள தாய் வீட்டில் இருந்துள்ளார். வெளிநாடு சென்றிருந்த செல்வம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊரான கூடலூருக்கு வந்துள்ளார்.
இதனையடுத்து, தாமரைக்குளத்திலிருந்து ரஞ்சிதாவை சமாதானம் செய்து கணவனுடன் சேர்த்துவைப்பதற்காக, ரஞ்சிதாவின் தந்தை செல்லமுத்து, அம்மா, பெரியப்பா கருப்பையன், தாய்மாமன் இளங்கோவன் ஆகியோர் செல்வத்தின் வீட்டிற்குச் சென்றனர்.
அப்போது செல்வத்துக்கும் ரஞ்சிதா தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது செல்வம், அவரது சகோதரர்கள் ரஞ்சிதாவின் உறவினர்களைத் தாக்க ஆரம்பித்தனர்.
இதில் அவர்கள் அங்கிருந்து வெளியேறவே செல்வம் ரஞ்சிதாவின் தந்தை செல்முத்தை விரட்டிச் சென்று தாக்கியுள்ளார். இந்தத் தாக்குதலில் செல்லமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்த மருவத்தூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து செல்லமுத்துவின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் செல்வம் அவரது உறவினர்களான சேகர், பூமாலை, மலர்விழி ஆகியோரைக் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.