பெரம்பலூர் மாவட்டம் பல்வேறு வரலாற்று சிறப்புகளை தன்னகத்தே கொண்ட மாவட்டமாகும். இங்கு ரஞ்சன்குடி பகுதியிலுள்ள ரஞ்சன்குடி கோட்டை, ஆயிரம் ஆண்டுகள் பழமையான தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் திருக்கோயில், பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு மரமாக இருந்து தற்பொழுது கல்லாக மாறிய சாத்தனூர் கல்மரம் பூங்கா உள்ளிட்ட பல்வேறு வரலாற்று சிறப்புக்களையும் பிரசித்தி பெற்ற சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் மயிலூற்று அருவி கோரையாறு அருவி உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களையும் கொண்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் காரை கிராமத்திலிருந்து கொளக்காநத்தம் கிராமம் வரை கடல்வாழ் தொல்லுயிர் எச்சங்கள் நிறைந்து காணப்படும். இந்தத் தொன்மையான பகுதியை பாதுகாத்து திறந்தவெளி அருங்காட்சியகம் அமைத்து எதிர்கால சந்ததியினருக்கு வரலாற்று ஆய்வு களமாக அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.
காரை கிராமத்திலிருந்து கொளக்காநத்தம் கிராமம் வரை சாலையின் இருபுறமும் சுமார் 1,500 ஏக்கர் பரப்பளவில் கடல் இருந்ததற்கான சான்றாக விளங்கும் இப்பகுதியை பாதுகாக்க கோரிக்கை எழுந்துள்ளது. பெரம்பலூரில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தூரத்தில் சாத்தனூர் கல்மர பூங்கா உள்ளது.
இந்தப் பூங்கா பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலாக இருந்தபோது இருந்த கோனிபெரஸ் (பூக்காத தாவர இனம்) மரம் நாளடைவில் கல்லாக மாறியதாக 1940ஆம் ஆண்டு இப்பகுதியில் ஆய்வு செய்த புவியியல் ஆராய்ச்சியாளர் கிருஷ்ணன் என்பவர் கண்டறிந்தார்.
சாத்தனூர் கிராமத்தை ஒட்டிய சாத்தனூர், குடிக்காடு, காரை, கொளக்காநத்தம், அயினாபுரம் போன்ற பகுதிகளை உள்ளடக்கிய கடலாக இருந்த பகுதியானது கல்மரப் பூங்கா கண்டறியப்பட்ட அதே ஆண்டில் கண்டறியப்பட்டு இருக்கலாம் என்பது தெரியவருகிறது.
மேலும் கடலாக இருந்து தற்போது நிலமாக மாறிய இந்தப் பகுதி மணலை குவித்து வைத்ததுபோல ஆங்காங்கே காட்சி அளிக்கிறது. கடல் பகுதியில் இருப்பதைப்போல பாசிகள் நிறைந்தும் கடற்பாறை திட்டுபோலவும் காட்சியளிக்கிறது. இந்தப் பகுதி தற்போது எந்தவித பராமரிப்பும், பாதுகாப்பும் இன்றி வெட்ட வெளியாகக் காணப்படுகிறது.
விவசாயிடமிருந்து பழமையான தொல்லியல் பொருள்கள் மீட்பு!
சில ஆக்கிரமிப்பு காரர்களால் படிப்படியாக வரலாற்று சிறப்புமிக்க இப்பகுதி விவசாய நிலமாக ஆக்கிரமிப்பு செய்யப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இந்தப் பகுதியை பார்வையிடவரும் புவியியல் ஆராய்ச்சி மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் அவ்வப்போது கிடைக்கக்கூடிய சான்றுகளை எடுத்துச் சென்றுள்ளனர் என்றும் எதிர்கால சந்ததியினருக்கு ஒரு புவியியல் அருங்காட்சியமாக இப்பகுதி திகழ வேண்டும் என்பதும் பொதுமக்கள், ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது.
இதனிடையே மாவட்ட நிர்வாகம், புவியியல் துறையினர் இந்தப் பகுதி முழுவதையும் பாதுகாத்து திறந்தவெளி அருங்காட்சியமாக அமைத்து அறிவிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர். இந்நிலையில் சாத்தனூர் குடிக்காடு என்ற கிராமத்தில் உள்ள வயல் பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கல் மரப் படிமத்தை அங்குள்ள இளைஞர்கள் கண்டறிந்துள்ளனர்.
அவ்வபோது இந்தப் பகுதியை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் கடல்வாழ் தொல்லுயிர் எச்சங்கள் அடிக்கடி கிடைக்கப் பெறுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க... பெரம்பலூரில் பழமையான கல்மரப் படிமம் கண்டெடுப்பு!