பெரம்பலூர்: வேப்பூர் அருகே பள்ளக்காளிங்கராயநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கலைவாணன். இவரது தாயார் லட்சுமி என்பவர், அதே ஊரில் உள்ள வீட்டின் மாடியில் குடியிருந்து வந்த நிலையில் கடந்த மாதம் 18ஆம் தேதி சந்தேகத்திற்கு இடமான முறையில் இறந்து கிடந்தார்.
இவர் இயற்கையாக இறந்து விட்டதாக கருதி அவரது உடலை உறவினர்களுடன் சேர்ந்து, பள்ளக்காளிங்கராயநல்லூர் மயானத்தில் அடக்கம் செய்து விட்டனர். இந்நிலையில் ஒரு வாரம் கழித்து கலைவாணன் தனது வீட்டிலிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளைப் பார்த்தபோது, அவரது தாய் லட்சுமி இறந்த அன்று இரவு 10 மணிக்கு மேல் அவர் வசித்து வந்த வீட்டின் மேல்மாடி பகுதிக்கு, அவரது உறவினர் சிலர் வந்து சென்றது பதிவாகியிருந்தது.
இதனால், தனது தாயின் இறப்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்றும், அடக்கம் செய்யப்பட்டுள்ள அவரது சடலத்தை தோண்டி எடுத்து, உடற்கூராய்வு செய்ய வேண்டும் என கடந்த மாதம் 28ஆம் தேதி பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கலைவாணன் மனு கொடுத்திருந்தார்.
மேலும் புகார் மனுவோடு சிசிடிவி காட்சிப் பதிவுகளையும் ஆதாரமாக கொடுத்திருந்தார். இந்த மனு மீது உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணி உத்தரவிட்டதன் பேரில், குன்னம் காவல் துறையினர், லட்சுமியின் மரணத்தை சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மேலும் குன்னம் வட்டாட்சியர் அனிதா முன்னிலையில் அரசு மருத்துவர் சரண்யா தலைமையிலான மருத்துவக்குழவினர் அடக்கம் செய்யப்பட்டிருந்த லட்சுமியின் சடலத்தை தோண்டி எடுத்து உடற்கூராய்வு செய்தனர். மேலும் லட்சுமியின் சடலத்தில் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நெல்லையில் பெண் கொடூர கொலை