பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், பிலிமிசை கிராமத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம். சென்னையில் கூலி வேலை செய்து வரும் இவருக்கு இலக்கியா என்ற பெண் உள்ளார்.
சிறுவயதிலேயே இலக்கியாவிற்கு கராத்தே விளையாட்டில் ஆர்வம் ஏற்பட்டதால், சிறப்பு பயிற்சியில் ஈடுபட்டு மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்றுள்ளார். இந்நிலையில், கடந்த வாரம் மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச அளவிலான கராத்தே போட்டியில் இலக்கியா பங்கேற்றார். இப்போட்டியில், இரண்டு பிரிவுகளில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார் இலக்கியா.
வெற்றி பெற்று நாடு திரும்பிய இலக்கியாவிற்கு சொந்த ஊரான பிலிமிசை கிராமத்தில் ஊர் பொதுமக்கள் ஒன்று திரண்டு உற்சாக வரவேற்பும் பாராட்டும் தெரிவித்தனர். இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில் இலக்கியாவை பாராட்டி கவுரவித்துள்ளனர். மேலும், ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரூ.5 ஆயிரம் பரிசுத்தொகையை வழங்கினர். இதில் ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.