பெரம்பலூர் மாவட்டம் காரியானூர் ஊராட்சிக்குட்பட்ட கிராமம் வெள்ளு வாடி. இந்த கிராமத்தில் இடுகாடு வசதி இருப்பினும், அங்கு செல்வதற்கான பாதை இல்லாததால், அப்பகுதியிலுள்ள மக்கள் சடலங்களை வெள்ளாற்றின் கரையில் தகனம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஆற்றில் சடலங்கள் தகனம் செய்யப்படுவதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதோடு, ஆற்று நீரை பயன்படுத்தும் மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும் சூழலும் உருவாகியுள்ளது. இது குறித்து பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதனால் மாவட்ட நிர்வாகம் மற்றும் ஊராட்சி நிர்வாகம் உடனடியாக இதில் தலையிட்டு வெள்ளு வாடி இடுகாடு செல்ல பாதை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.