கரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக, பல்வேறு தொழிலாளர்களுக்கு வேலையில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட வீடியோ மற்றும் புகைப்படக் கலைஞர்கள் முன்னேற்றச் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இதுகுறித்து மனுவில் கூறியதாவது; 'மத்திய, மாநில அரசுகள் விதித்திருக்கின்ற கரோனா வைரஸ் பரவல் தடுப்புக் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தி திருமண மண்டபங்களில், வழக்கம்போல் சுபநிகழ்ச்சி நடத்த அனுமதி அளிக்க வேண்டும்.
புகைப்படக் கலைஞர்கள் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக இல்லை என்பதற்காக, தமிழ்நாடு அரசின் இடைக்கால நிவாரண உதவிகள் மறுக்கப்படுவதால் 2000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட வேண்டும்.
கரோனா தொற்று பேரிடர் காலத்தில் புகைப்படக் கலைஞர்கள், தனியார் நிதி நிறுவனங்களில் வாங்கிய கடனுக்காக தவணைத்தொகையை வலுக்கட்டாயமாக வசூலிக்கின்றனர்.
மேலும் தங்களுக்கு நிதிச் சுமை, மன உளைச்சலை ஏற்படுத்துகின்ற கட்டாய வசூல் நடத்தக்கூடாது என்று தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டும்' எனத் தெரிவித்தனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வீடியோ மற்றும் புகைப்படக் கலைஞர்கள் பலர் மனு அளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.