பெரம்பலூர் மாவட்டம் வி. களத்தூர் அருகே இனாம் அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவரது மகன் அன்புகுமார், தனியார் பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்துவந்தார்.
கரோனோ பரவல் காரணமாக வீட்டிலிருந்த அன்புகுமாருக்கு, ஆன்லைன் வகுப்பிற்காக ஸ்மார்ட்போன் வாங்கிக் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஆன்லைன் வகுப்புகள் படிக்கும் நேரம் போக, மீதி நேரங்களில் இணையதள விளையாட்டுகளை அதிகளவில் விளையாடி வந்ததாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக ஃபிரீ பையர் கேமில் நண்பர்களுடன் இணைந்து விளையாடுவதை, தினசரி பணியாகவே வைத்திருந்தார்.
நேற்று (மார்ச் 29) மாலை இந்த கேமின் அடுத்த பதிப்பைப் பதிவிறக்கம் செய்துதருவதாக நண்பர்கள் கூறியதன்பேரில், அவர்களைப் பார்க்க அன்புகுமார் வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார்.
ஆனால், அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. சிறுவனின் செல்போனும் அணைத்துவைக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, சிறுவனைப் பல இடங்களில் குடும்பத்தினர் தேடிவந்துள்ளனர்.
இந்நிலையில், இன்று காலை கல்லாறு பகுதியில் தண்ணீர் தேங்கியிருந்த இடத்தில் சடலமாக அன்புகுமார் கிடப்பதைக் பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பிவைத்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சிறுவனின் தொலைபேசிக்கு போன் செய்து அவரை விளையாட அழைத்த நபர்கள் யார் யார் என விசாரணை நடத்திவருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தம்பி தற்கொலை: அதிர்ச்சியில் அண்ணன் நெஞ்சுவலியால் மரணம்!