பெரம்பலூர்: தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஆலங்கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர், பூல்பாண்டியன். 75 வயது முதியவரான இவருக்கு திருமணமாகி 3 பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் இவர் மும்பை உள்ளிட்டப் பல்வேறு முக்கிய நகரங்களுக்குச் சென்று வந்துள்ள நிலையில் சில இடங்களில் இஸ்திரி செய்யும் வேலையும் செய்து வந்துள்ளார்.
மேலும் குடும்பத்தை விட்டு வெளியே வந்த இவர் யாசகம் பெற்று, அதன் மூலம் கிடைத்த பணத்தை பல்வேறு நலத்திட்டங்களுக்கு தமிழ்நாடு அரசுக்கு கொடுத்து வந்துள்ளார். இதற்கு அவரது குடும்பத்தினர் எதிர்ப்புத் தெரிவித்து, அந்த பணத்தை தங்களிடம் வழங்க வேண்டும் என்று கூறியதால் குடும்பத்தை விட்டு வெளியேறிய, பூல்பாண்டியன் தான் பல்வேறு நகரங்களில் யாசகமாகவும் பல தொழிலதிபர்களிடம் நன்கொடையாகவும் பெற்ற பணத்தினை பள்ளிகளுக்கும் ஏழை சிறுவர் சிறுமியர்களுக்கும் உதவித்தொகையாக வழங்கியதோடு, தமிழ்நாடு முதலமைச்சரின் நிவாரண நிதிக்காக இதுவரை ரூ.55 லட்சம் வழங்கி உள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களையும் சந்தித்து நிதி வழங்கிய நிலையில், பெரம்பலூர், சென்னை மற்றும் திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்ட ஆட்சியரை மட்டும் சந்திக்காமல் இருந்ததாகவும், இன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கற்பகத்தை நேரில் சந்தித்து தன்னிடம் இருந்த பத்தாயிரம் ரூபாயை முதலமைச்சரின் நிவாரண நிதியில் நேரடியாக வங்கியில் செலுத்தவுள்ளதாக்கூறி, வாழ்த்து பெற வந்ததாகவும் தெரிவித்தார்.
இதனைக்கேட்ட ஆட்சியர் கற்பகம், அவரது செயலைப் பாராட்டி அவருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். இதனைத் தொடர்ந்து தன்னிடம் இருந்த ரூ.10,000 ரொக்கப் பணத்தை எடுத்துக்கொண்டு, பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு நேரில் சென்று, அதனை முதலமைச்சர் நிவாரண நிதியில் செலுத்த உள்ளதாகத் தெரிவித்தார்.
மிகப்பெரிய தொழிலதிபர்களே இதுபோன்ற உதவி வழங்க முன் வராத நிலையில் தான் யாசகம் மூலம் பெற்ற பணத்தினை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக செலுத்தும் இந்த முதியவரின் செயல்பாடு பாராட்டக் கூடியதாக உள்ளது.
இதையும் படிங்க: அம்பானி வீட்டு விருந்தில் கரன்சி நோட்டுடன் உணவு பரிமாறப்பட்டது ஏன் தெரியுமா?