கரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் இருக்க தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் ஏழு நபர்கள் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் வி.களத்தூர் கிராமத்தில் டெல்லி சமய மாநாட்டிற்கு சென்ற ஒருவருக்கும் அவருடைய மைத்துனரும், விகளத்தூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் தலைமை காவலர் ஒருவருக்கும் என மூன்று பேருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டது.
அதேபோல் பாளையம் கிராமத்தில் 4 வயது சிறுவனுக்கும், பேரளி கிராமத்தைச் சேர்ந்த காசி யாத்திரைக்கு சென்ற பெண்மணிக்கும் நோய் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட துறைமங்கலம் பகுதியில் தீயணைப்பு வீரர் ஒருவரும் கல்லூரி மாணவர் ஒருவருக்கு நோய்த் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட காரணத்தினால் கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி முதல் இன்று வரை பெரம்பலூர் சுற்றி எட்டு கிலோ மீட்டர் பரப்பளவில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மருந்தகங்கள் தவிர அனைத்து கடைகளும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு காவலர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 3 ஆயிரத்து 306 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 3 ஆயிரத்து 506 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், ஆயிரத்து 815 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் மாவட்ட காவல்துறை தரப்பில் தெறிவிக்கப்பட்டுள்ளது.