பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகேயுள்ள தொண்டமாந்துறை கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தகுமார். கடந்த 2021ஆம் ஆண்டு ஆன்லைன் மோசடி கும்பல், 'நீங்கள் ஆன்லைனில் வாங்கிய கைக்கடிகாரத்திற்கு ரூ. 12 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான மஹேந்திரா காரை பரிசாக வென்றுள்ளீர்கள்' என்று ஆனந்தின் வாட்ஸ்-அப் எண்ணிற்கு குறுந்தகவல் ஒன்றை அனுப்பியுள்ளது.
அதன் பிறகு ஆனந்தை மூளைச்சலவை செய்த அந்த கும்பல், காருக்கு வரி செலுத்த ரூபாய் 58 ஆயிரம் வேண்டுமென்று கூறி ஒரு வங்கி கணக்கு எண்ணை அனுப்பியுள்ளது. இதை உண்மையென நம்பிய ஆனந்த் அந்த தொகையை கட்டியுள்ளார். அதன் பிறகு, லாவகமாக பேசிய அந்த கும்பல் படிப்படியாக வெவ்வேறு வங்கி கணக்குகள் வாயிலாக ஆனந்தகுமாரிடம் ரூ. 6 லட்சத்து 34 ஆயிரம் வரை பெற்றுள்ளது.
கட்டிய பணம் போய் விட கூடாதே என எண்ணி ஆனந்தகுமாரும் நண்பர்களிடம் கடன் வாங்கி அந்த தொகையை கட்டியதாக தெரிகிறது. அதன் பிறகு அந்த கும்பல் சம்பந்தபட்ட செல்போன் இணைப்பை துண்டித்துவிட்டனர். பிறகு தான் ஏமாந்ததை உணர்ந்த ஆனந்தகுமார் இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கடந்தeண்டு (23.08.2021) தகுந்த ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து, பெரம்பலூர் எஸ்.பி மணி உத்தரவின்பேரில், இவ்வழக்கை மாவட்ட சைபர் கிரைம் போலீஸார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், கடந்த வார இறுதியில் ஆன்லைன் மோசடி கும்பல் டெல்லியில் இருப்பது குறித்த தகவல் சைபர் கிரைம் போலீசாருக்கு கிடைத்தது. இதையடுத்து, சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் ரஞ்சனா தலைமையிலான தனிப்படையினர் கடந்த ஜூலை 24ஆம் தேதி டெல்லி விரைந்தது.
இதைத்தொடர்ந்து, ஆன்லைன் மூலம் மோசடி செய்த கும்பலைச் சேர்ந்த உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த ரோஹித் பால், ராம் ஹெல்வான் கிஷன் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த அங்கித் பன்சால் ஆகியோரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து ரூபாய் 4 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கம், ஒரு லேப்டாப், பிரிண்டர், 10 செல்போன்கள், 62 சிம்கார்டுகள், கீபோர்டுகள், இவற்றுடன் ஏராளமான ATM கார்டுகள், வங்கி பாஸ்புக்குகள், மற்றும் செக்புக்குகள் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீஸார் அவர்களை ஆக.2ஆம் தேதி டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு, பின்னர் அவர்களை பெரம்பலூர் அழைத்து வந்தனர்.
தொடர்ந்து எஸ்.பி., உத்தரவின்படி அவர்களை நேற்று (ஆக. 6) இரவு மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். ஆன்லைன் அழைப்புகளை நம்பி பரிசுக்கு ஆசைப்பட்டு இதுபோன்று ஏமாற வேண்டாம் என பொதுமக்களுக்கு மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையும் படிங்க: 75ஆவது சுதந்திர தினம் - மூவர்ண விளக்குகளால் மின்னும் ரஞ்சன்குடி கோட்டை