கரோனா நோய் தொற்று பரவாமல் இருக்க தமிழ்நாடு முழுவதும் மே மூன்றாம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை ஏழு பேர் கரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே மாவட்ட நிர்வாகம் சார்பில் அப்பகுதி பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு தூய்மைப் பணியாளர்கள், காவலர்கள் தீவிர பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் வி.களத்தூர் ஊராட்சியில் ஏப்ரல் 21ஆம் தேதி மாலை தூய்மைப் பணியாளர் அய்யாதுரை என்பவர் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு தனது தாய் அங்கம்மாள் (65) உடல்நலக் குறைவால் உயிரிழந்து விட்டதாக அதிர்ச்சியான தகவல் கிடைத்தது.
பின்னர் அவர் வீடு இருக்கும் இடம் பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதால் 15 நபர்களை கொண்டு தாயின் உடலை அவர் அடக்கம் செய்து இறுதி சடங்கை முடித்தார். மேலும் தாயின் இறப்பால் பெருமளவு பாதிக்கப்பட்ட அய்யாதுரை கவலையை மனதில் வைத்துக்கொண்டு மக்கள் நலனுக்காக இறுதி சடங்கை முடித்த அரை மணி நேரத்தில் கரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்.
இவரின் இச்செயலை அறிந்த அப்பகுதி மக்கள், மாவட்ட அலுவலர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் பாராட்டினர். இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் அய்யாதுரைக்கு வருத்தத்தை தெரிவித்துக் கொண்டதோடு அவருக்கு தலை வணங்குவதாகவும் பதிவிட்டிருந்தார்.
இதனிடையே தற்போது பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வன், துப்புரவுப் பணியார் அய்யாதுரையின் கடமையை பாராட்டி அவருக்கு சால்வை அணிவித்து, ஐந்தாயிரம் ரூபாய் பணம் வழங்கினார்.
இதையும் படிங்க: தூய்மைப் பணியாளருக்கு தலை வணங்குகிறேன் - முதலமைச்சர்