பெரம்பலூர்: தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் பெரம்பலூரில் புதிய வழித்தடங்களில் போக்குவரத்து வசதியைத் தொடங்கி வைத்தார்.
குறிப்பாக, குன்னம் மற்றும் திட்டக்குடி இடையேயான நகரப்பேருந்து வசதி, அரியலூர் மற்றும் வேப்பூர் இடையேயான புதிய வழித்தடப் பேருந்து வசதிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் இன்று (மே 16) தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, அதே பேருந்துகளில் பயணிகளுடன் பயணம் செய்த அவர், செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர், 'அண்டை மாநிலங்களில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அந்த இடங்களுக்குச் செல்லும் நமது தமிழ்நாடு அரசு பேருந்துகளுக்கு இடையே கட்டண விகிதம் ஏற்படுகிறது. இது அண்டை மாநில ஒப்பந்தத்தின்படி, சரி செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், இது குறித்து அலுவலர்கள் புதிய கட்டண விகிதத்தை வரையறை செய்து கொடுத்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சருடன் ஆலோசனை செய்து முடிவு செய்யப்படும்.
பொதுமக்களுக்கு நிறைவான சேவை: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சுமார் ரூ.48,500 கோடி கடன் சுமையில் சிக்கித் தவித்து வருகிறது. இருப்பினும், தமிழ்நாட்டில் பேருந்து கட்டணம் உயர்த்துவது குறித்து இதுவரை முடிவு செய்யப்படவில்லை. தமிழ்நாடு முதலமைச்சர் இது ஒரு சேவை துறை என்பதனால் பொதுமக்களுக்கு நிறைவான சேவையை வழங்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும், போக்குவரத்து தொழிலாளர்களின் சம்பள உயர்வு, போனஸ் உள்ளிட்ட பிரச்னைகளும் விரைவில் பேசித் தீர்க்கப்படும். பேருந்து நிலையங்களில் பயணிகளிடம் அத்துமீறி நடந்து கொள்ளும் திருநங்கைகள் குறித்து புகார் வரப்பெற்றால், அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசு போக்குவரத்து ஊழியர்கள் மீதான தாக்குதல் குறித்து உரிய நடவடிக்கை: பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள பேருந்துகளை மாற்றவும், பழுது நீக்கம் செய்யவும், புதிய பேருந்துகள் வாங்குவதற்கும் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. பேருந்து நடத்துநர்கள் மற்றும் ஓட்டுநர்கள் தாக்கப்படுவது குறித்து முறையான விசாரணை நடத்தப்படும், போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு வழங்கப்படும்' என்றார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா, பெரம்பலூர் சட்டப்பேரவை உறுப்பினர் பிரபாகரன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் திரளாகப் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: பேருந்துக்குள் மழை.. குடைபிடித்த மக்கள்!