பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு விடுதியில் மாணவிகளிடம் பாலியல் தொல்லை தந்த பயிற்சியாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் மாவட்டச் செயலாளர் கல்யாணி தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கடப்பிரியா மற்றும் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணி ஆகியோரிடம் புகார் மனு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து அவர்கள் தெரிவிக்கையில் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவிகளிடம் டேக்வாண்டோ பயிற்சியாளர் தர்மராஜ் என்பவர் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலருக்கு தகவல் தெரிவித்தும் அவர் மாணவிகளிடம் சமாதானம் பேசி அனுப்பி வைத்துள்ளார். மாணவிகள் பிரச்னை தொடர்பாக தகவல் அறிந்த, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புச் சட்ட நன்னடத்தை அலுவலர் கோபிநாத் அங்கு விசாரணை மேற்கொண்டு ஆய்வு நடத்தினார்.
இதில் கடந்த ஒரு வருட காலத்திற்கும் மேலாக தர்மராஜ் விளையாட்டு விடுதி மாணவிகளிடம் பாலியல் ரீதியான தொந்தரவுகள் கொடுத்து வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவர் கொடுத்தப் புகாரின் அடிப்படையில் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் டிசம்பர் மாதம் 7-ம் தேதி தர்மராஜ் மீது போக்சோவின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இருப்பினும் இதுவரை அவர் மீது எந்த ஒரு துறை ரீதியான நடவடிக்கையும் காவல்துறையினர் நடவடிக்கையும் இல்லை என்பதால், இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில், சம்பந்தப்பட்ட பயிற்சியாளர் மீது நடவடிக்கை எடுக்கவும் மேலும் அவர் மீது (CP/Cid) சிபிசிஐடி விசாரணை எடுக்க வலியுறுத்தியும் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இடம் இது குறித்து மனு அளித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
மேலும் டிசம்பர் 14ஆம் தேதி நேற்று உதயநிதி ஸ்டாலின் அவர்கள் விளையாட்டுத்துறை அமைச்சராகப் பதிவேற்றுள்ள நிலையில் இதைக் கவனத்தில் கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
இதையும் படிங்க:ஆன்லைன் ரம்மியால் மாணவர் தற்கொலை