திருச்சி மாவட்டம் சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள லலிதா ஜுவல்லரி நகைக்கடையில் அக்டோபர் 2ஆம் தேதி 13 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளையர்கள் திருடிச் சென்ற சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இதனையடுத்து திருச்சி காவல் துறை ஏழு தனிப்படை அமைத்து கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய மணிகண்டன், சுரேஷின் தாயார் கனகவள்ளி உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் காலை காவல் துறையினரால் தேடப்பட்டுவந்த மற்றொரு தேடப்பட்டு வரும் மற்றொரு குற்றவாளியான சுரேஷ் என்பவர் திருவண்ணாமலையில் செங்கம் நீதிமன்றத்திலும் சரணடைந்தார். இதனிடையே, லலிதா ஜுவல்லரி கொள்ளை விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான முருகன் பெங்களூருவில் தலைமறைவாக இருந்து வந்தார். முருகன் தலைமறைவாக இருக்கும் இடத்தை அறிந்த தனிப்படை காவல் துறையினர் பெங்களூரு விரைந்து முருகனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நேற்று முருகன் சரணடைந்தார். லலிதா ஜுவல்லரி கொள்ளைச் சம்பவம் தொடர்பாக கர்நாடக நீதிமன்றத்தில் ஆஜரான முருகனிடம் பெங்களூரு கொள்ளைச் சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர். இதில், பெங்களூருவில் கொள்ளையடித்த தங்கத்தை பெரம்பலூரில் உள்ள நபரிடம் கொடுத்து வைத்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், கர்நாடக காவல் துறையினர் முருகனை பெரம்பலூர் அழைத்து வந்து தனிப்படை காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். பெரம்பலூர் ஆயுதப்படை மைதானத்தில் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக், திருச்சி மாநகர துணை ஆணையர் மயில்வாகனன் உள்ளிட்ட காவல் அலுவலர்கள் முருகனிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.