பெரம்பலூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழ்நாடு அரசு உத்தரவின்படி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படாமல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனி பெட்டி வைக்கப்பட்டு அதன் மூலம் மனுக்கள் பெறப்பட்டு வந்தன. தற்போது தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதன் மூலம் கரோனா வைரஸ் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. பொதுமக்கள் நலன் கருதி பொது மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வண்ணம் வட்ட அளவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடத்திட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வெங்கட பிரியா உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " வேப்பந்தட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை ஆட்சியர் சக்திவேல் தலைமையிலும், பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல அலுவலர் கிறிஸ்டி தலைமையிலும், ஆலத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி ஆணையர் கலால் சோபா தலைமையிலும், குன்னம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ரமண கோபால் தலைமையிலும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஒவ்வொரு திங்கட்கிழமைகளிலும் நடைபெறவுள்ளது. சரியாக 10:30 மணி முதல் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்படும்.
பொதுமக்களின் தேவைகளை கருத்தில் கொண்டே மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடத்தப்பட்டாலும் கரோனா வைரஸ் தோற்று முழுவதுமாக கட்டுப்படுத்தப்படாத சூழ்நிலை உள்ளதால், மக்கள் கவனமாக பாதுகாப்பு நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். பொது மக்கள் முக கவசம் அணிந்தும் தகுந்த இடைவெளியை கடைபிடித்தும் பாதுகாப்பான முறையில் மனுக்கள் அளித்திட வேண்டும்" என வேண்டுகோள் விடுத்துள்ளார்.