பெரம்பலூர் மாவட்டம் விவசாயத்தை முதன்மையாகக் கொண்டது. வானம் பார்த்த பூமியான இந்த மாவட்டத்தில் மழையை நம்பியே பெருவாரியான நிலங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இம்மாவட்டத்தில் பருத்தி, மக்காச்சோளம், சின்ன வெங்காயம், கம்பு, எள் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.
இந்த ஆண்டு செட்டிகுளம், கல்பாடி, பணங்கூர் உள்ளிட்ட பகுதிகளில் கம்பு அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. அதேபோல் வேப்பந்தட்டை, பாலையூர், தொண்டபாடி உள்ளிட்ட பகுதிகளில் வாழை மரங்கள், எள் உள்ளிட்டவை அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.
இதனிடையே நேற்று பெரம்பலூர் முழுவதும் பலத்த சூறைக்காற்றுடன் பெய்த மழையினால் பயிரிடப்பட்ட அனைத்தும் சூறைக்காற்றால் சேதமடைந்தன. மேலும் அறுவடை செய்யும் இந்த நேரத்தில் பயிர்கள் விழுந்து சேதம் அடைந்தது விவசாயிகளை மேலும் வேதனை அடையச் செய்துள்ளது.