கரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் இருக்க நாடு முழுவதும் மே 3ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் இந்த வைரஸ் நோய் தொற்றால் இதுவரை ஏழு பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இதனிடையே நகராட்சிக்குட்பட்ட துறைமங்கலம் பகுதியில் மேலும் இருவருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதியானது. இதன் காரணமாக பெரம்பலூர் நகராட்சியை சுற்றி எட்டு கிலோமீட்டர் பரப்பளவில் கடந்த ஏப்ரல் 25, 26, 27 ஆகிய மூன்று நாள்கள் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மருந்தகங்கள் தவிர அனைத்துக் கடைகளும் மூடப்பட்டிருந்தன.
இந்நிலையில், மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மறு அறிவிப்பு வரும்வரை பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாகவும், சிறிய மளிகை கடைகள் மட்டும் மதியம் ஒரு மணி வரை திறந்து இருக்கலாம் என்றும் உழவர் சந்தை, காய்கறி மார்க்கெட், சூப்பர் மார்க்கெட், இறைச்சி கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் திறக்க தடை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ஊரடங்கு தடையை மீறி செயல்பட்ட பழைய பேருந்து நிலையம் அருகில் இறைச்சிக் கடைக்கு நகராட்சி அலுவலர்கள் சீல் வைத்தனர். மேலும் பொதுமக்கள் வசதிக்காக நடமாடும் காய்கறிகள் விற்பனை தொடங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் பார்க்க: மத்திய தொழில் துறை பாதுகாப்புப் படை வீரர்களுக்கு பிரத்யேக முகக்கவசம்