பெரம்பலூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக 95 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஐந்து பேர் ஏற்கனவே சிகிச்சை பெற்று குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இதனிடையே திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தீயணைப்பு படை வீரர் உள்பட இரண்டு பேர் குணமடைந்து நேற்று (மே 10) வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். எஞ்சிய 88 பேர் பெரம்பலூர், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் ஒன்பது நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் அத்தியூர், காடூர், பெரியம்மா பாளையம், இலுப்பைக்குடி, குன்னம் ஆகிய கிராமங்களில் மொத்தம் ஐந்து கர்ப்பிணி பெண்கள் உள்பட ஒன்பது பேருக்கு உறுதிப்படுத்தப்பட்டு அவர்கள் பெரம்பலூர், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கர்ப்பிணி பெண்களை தவிர எஞ்சிய நான்கு பேர் கோயம்பேடு காய்கறி சந்தையில் இருந்து வந்தவர்கள் என்பதால் அவர்களோடு தொடர்புடைய நபர்கள் கண்டறியப்பட்டு மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ளும் பணியில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் புதிதாக கரோனா வைரஸ் தொற்று பாதித்த நபர்கள் வசித்த பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, சுகாதாரத் துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் மே 9ஆம் தேதி வரை 106 நபர்கள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்ததாகக் கூறப்பட்டிருந்த நிலையில், 11 பேர் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என சுகாதாரத் துறையினர் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 104 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.