இந்தியாவில் மொத்தம் எட்டு கோடி பனை மரங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் மட்டுமே ஐந்து கோடி மரங்கள் உள்ளதாக தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக குறிப்புகள் தெரிவிக்கின்றன. பனைமரம் தமிழர்களின் அடையாளம் என பேசப்பட்டாலும், பனைமரங்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து வருவதாக சூழலியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கிராமப்பகுதிகளில் ஏரி, குளங்களில், வயல்வெளி வரப்புகளில், ஏரிப்பகுதிகளில் பனைமரம் அதிகமாக காணப்படுகிறது. பனைமரங்கள் நீரை உறிஞ்சி சேமித்து வைக்கும் தன்மை கொண்டது. மண் அரிப்பை தடுத்து நிலங்களை பாதுகாத்து வருகிறது. அதுமட்டுமல்லாது, பனைமரத்தின் மூலம் பதநீர், பனைகிழங்கு, இயற்கை முறையில் தயாரிக்கப்படும் கருப்பட்டி வெள்ளம், பனங்கள்ளு ஆகியவை உடல்நலத்திற்கு நன்மை பயக்கும் உணவை தருகிறது.

இது பழமை மறக்கும் காலம் என்பதால் பனைமரத்தின் பயனை அறியாத நிலை மாறிவிட்டது. எனவே பனைமரத்தை காப்பது நமது தலையாய கடமைகளில் ஒன்று. அந்த வகையில், பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூர் பேரூராட்சிக்குட்பட்ட ஈச்சம்பட்டி பகுதியில் இருந்து தொடங்கி ஏரிக்கரை பகுதி வரை தமிழ்நாடு அரசு வேளாண்மை துறை மற்றும் குரும்பலூர் அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவிகள் இணைந்து 8,000 பனை விதைகள் நடவுப் பணிகள் நடைபெற்றன.
இந்த பனை விதை நடும் பணியை வேளாண்மை இணை இயக்குநர் கணேசன் தொடங்கி வைத்தார். இந்த விழாவில், பனை மரத்தின் சிறப்பு, குறித்தும் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு கருத்துக்கள் எடுத்துரைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் வேளாண் அலுவலர்கள், சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: பெண்கள் நடத்திய நியாயவிலைக் கடையை கூட்டுறவுத்துறைக்கு மாற்றிய உத்தரவுக்கு இடைக்காலத் தடை