இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வேதாந்தா வெளியிட்ட செய்திக் குறிப்பில், "வடகிழக்கு பருவமழை தொடங்குவதால் பொதுமக்கள் நீர்நிலைகளைப் பயன்படுத்தும்போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஏரி, கண்மாய், குளம் போன்ற நீர்நிலைகளில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குழந்தைகள் மற்றும் சிறுவர்களை பெரியவர்கள் துணையின்றி தனியாக நீர் நிலைகளுக்கு செல்ல அனுமதிக்கக் கூடாது. மேலும் மழைக்காலங்களில் பொதுமக்கள் குளோரின் கலந்த குடிநீரை மட்டுமே குடிக்க பயன்படுத்த வேண்டும். அதையும், காய்ச்சிய பின்பே குடிக்க வேண்டும்.
மழைக்காலங்களில் பல்வேறு பொருள்கள் கலந்து அசுத்தமாக இருக்கும் நீர்நிலைப் பகுதிகளில் உள்ள நீரினை பிற பயன்பாட்டிற்கு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மழைப்பொழிவின்போது நீர் வரத்து வாய்க்கால் பகுதிகளைக் கடக்க முயல்வதை தவிர்த்திட வேண்டும்.
மேலும், மழைநீரின் மூலம் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல் மற்றும் தொற்று நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளதால், மழைநீர் வீட்டை சுற்றி தேங்காமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். தங்களது இருப்பிடங்களை சுற்றி டெங்கு கொசுக்கள் உருவாவதற்கு காரணங்களான தேங்காய் மட்டை தயாரிப்பு பொருள்கள் போன்றவற்றை அப்புறப்படுத்தி சுத்தமாக பராமரித்திட வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நாட்டை கொள்ளையடிப்பதுதான் EIA 2020 வரைவின் தெளிவான நோக்கம்' - ராகுல் தாக்கு