திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஐ.ஜே.கே கட்சியின் நிறுவனர் பாரிவேந்தரை ஆதரித்து பெரம்பலூர் காமராஜர் வளைவில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், "இந்த மக்களவைத் தேர்தல் ஜனநாயகத்திற்கும், பாசிசத்திற்கும் எதிராக நடக்கும் தேர்தலாகும். தற்போது பட்டதாரி இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள். தமிழ்நாட்டிற்கு வந்த தொழில் நிறுவனங்களிடம் அதிமுக அரசு கேட்ட கமிஷன் தொகையால் வேறு மாநிலங்களுக்குச் சென்றுவிட்டதே இதற்கான காரணம்.
22 லட்சம் பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை அளிக்கப்படும், எளிய மக்களுக்கு மாதம் 6 ஆயிரம் வீதம் வருடத்திற்கு 72 ஆயிரம் வழங்கப்படும் என ராகுல் காந்தி அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரத்தில் தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலைக்குக் கூலிப்படை போல் செயல்பட்டது. தமிழகத்தை வஞ்சிக்கும் நோக்கில் மத்திய அரசு செயல்படுகிறது" எனத் தெரிவித்தார்.