நாமக்கல்: ராசிபுரம் அடுத்த காக்காவேரி விநாயகர் கோவில் தெரு 3வது வார்டில் ஊராட்சி மன்ற உறுப்பினரும் பூசாரிபாளையம் அதிமுக கிளை செயலாளர் அங்கமுத்து(55) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் அதே பகுதியில் மாத சீட்டு நடத்தி வரும் சீனிவாசன் என்பவரிடம் 2 லட்சம் ரூபாய் சீட்டுப் போட்டுள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த சண்முகம் என்பவருக்குப் பணம் தேவைப்பட்டதால் அங்கமுத்துவிடம் வட்டிக்கு கடன் கேட்டுள்ளார்.
ஆனால் அங்கமுத்து தன்னிடம் பணம் இல்லை எனவும், சீனிவாசனிடம் சீட்டுப் போட்டுள்ளேன் அதை எடுத்துக்கொண்டு சீட்டுப் பணத்தை நீயே கட்டி விடு எனக்கூறி சீட்டுப் பணத்தை எடுத்துக் கொடுத்துள்ளார். பணத்தைப் பெற்றுக் கொண்ட சண்முகம் பல ஆண்டுகளாகச் சீட்டுப்பணம் கட்டாததால் சீட்டு நடத்தும் சீனிவாசன் அங்கமுத்துவிடம் தகராறில் ஈடுபட்டதால் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இந்நிலையில் சண்முகத்தைத் தொடர்பு கொண்டு சீட்டுப் பணத்தைக் கட்ட சொல்லி அங்கமுத்து எச்சரிக்கை விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சண்முகம் தன் மகன் பாலமுருகன் மற்றும் உறவினர்கள் ரங்கநாதன், கமல் ஆகியோருடன் நேற்று மாலை அங்கமுத்து வீட்டிற்கு வந்து தகராற்றில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
அதிகாலை 1 மணி அளவில் அங்கமுத்து வீட்டு வாசலில் நின்ற கொண்டிருந்த புதிய ஸ்கூட்டி மற்றும் ஹோண்டா சைன் பைக் என இரண்டு இரு சக்கர வாகனங்கள் பெட்ரோல் ஊற்றி சண்முகம் மற்றும் அவரது மகன் பாலமுருகன் தீ வைத்து விட்டுத் தப்பி ஓடி உள்ளனர். சத்தம் கேட்டு வெளியே வந்த அங்கமுத்து குடும்பத்தினர் வாகனங்கள் தீப்பற்றி எரிவதைக் கண்டு தண்ணீர் ஊற்றி தீயை அணைத்த நிலையில் வாகனங்கள் முற்றிலும் எரிந்து சேதமானது.
பின்னர் சம்பவம் தொடர்பாக நாமகிரிப்பேட்டை காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்ததை அடுத்துக் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் அதிமுக கிளை செயலாளரின் வாகனங்கள் தீயிட்டு எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நாமக்கல்லில் முட்டை விலை வரலாறு காணாத உயர்வு!