நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்துள்ள காக்காவேரி ஊராட்சி மன்றத் தலைவராக பட்டியலின சமுதாயத்தை சேர்ந்த முருகேசன் என்பவர் உள்ளார். இங்கு ஊராட்சி மன்ற செயலாளராக பாப்பாத்தி என்பவர் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், ஊராட்சி மன்றத் தலைவரான தன்னை பணிகளை செய்ய விடாமல் பாப்பாத்தி தடுத்து வருவதாகவும், மேலும் அவரது கணவர், தொடர்ந்து மிரட்டி வருவதாகவும் கூறி ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக முருகேசன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
தான் ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவன் என்பதால், செயலாளர் பாப்பாத்தி தன்னுடைய பணிகளை செய்யவிடாமல் தடுப்பதாகவும், பாப்பாத்தியின் கணவர் கொலை மிரட்டல் விடுப்பதாகவும், எனவே உடனடியாக பாப்பாத்தியை இடமாறுதல் செய்வதோடு, மிரட்டல் விடுத்த அவரது கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்போது முருகேசன் தெரிவித்தார்.
பின்னர், ஊராட்சி ஒன்றியத் தலைவர் மற்றும் அதிகாரிகள் முருகேசனுடன் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டதையடுத்து அவர் போராட்டத்தை கைவிட்டார்.
இதையும் படிங்க: அதிமுக நிர்வாகியிடம் தகராறு; ஷாருக்கான், சல்மான்கான் கைது!