நாமக்கல் மாவட்டம், செல்லப்பம்பட்டியைச் சேர்ந்தவர் ஜோதி (எ) பழனியம்மாள் (வயது 50). இவர் தனது பேரன் கிருத்திக் ரோஷனை இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு தனது மகள் வசிக்கும் ஊரான கரூர் மாவட்டம், தும்பிவாடிக்கு இன்று மதியம் சென்று கொண்டிருந்தார்.
இந்நிலையில், நாமக்கல் அடுத்த வள்ளிபுனம் புறவழிச்சாலை மேம்பாலத்தில் அவர்கள் சென்று கொண்டிருந்தபோது, தருமபுரியிலிருந்து கேரளா நோக்கிச் சென்ற கார் ஒன்று பழனியம்மாள் சென்ற இரு சக்கர வாகனத்தின் பின்புறமாக மோதியதாகக் கூறப்படுகிறது.
இதில், பழனியம்மாளும் அவரது பேரனான கிருத்திக் ரோஷனும் 50 அடி உயர மேம்பாலத்திலிருந்து கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் அதே கார் மற்றொரு இருச்சக்கர வாகனத்தின் மீது மோதியதில் இருவர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த இருவரும் தற்போது நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த நல்லிப்பாளையம் காவல் துறையினர், காரை ஓட்டி வந்த ஜெகதீசன் என்பவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.